இஸ்ரேலிய படையின் சூட்டில் மேலும் 4 பலஸ்தீனர்கள் பலி

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் ஜெனின் நகரில் இஸ்ரேலிய இராணுவம் நடத்திய புதிய சுற்றிவளைப்புத் தேடுதல் ஒன்றில் நான்கு பலஸ்தீனர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்ட இரு ஆயுததாரிகள் மற்றும் கடப்பாறையால் தம்மை தாக்க முயன்ற நபர் ஒருவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது. ஆயுததாரிகளுடன் துப்பாக்கிச் சண்டையிலும் ஈடுபட்டதாக அது மேலும் தெரிவித்துள்ளது.

கொல்லப்பட்டவர்களில் 16 வயது சிறுவன் ஒருவனும் இருப்பதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் மேலும் 20 பலஸ்தீனர்கள் காயமடைந்திருப்பதோடு அதில் நால்வரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இந்த ஆண்டு ஆரம்பித்தது தொடக்கம் மேற்குக் கரையில் இஸ்ரேலிய இராணுவத்தின் சுற்றிவளைப்புகள் தீவிரம் அடைந்திருப்பதோடு உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மறுபுறம் பாலஸ்தீனர்களின் தாக்குதல்களும் அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டில் இஸ்ரேலிய படையினரால் போராளிகள் மற்றும் பொதுமக்கள் என 80க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதோடு பலஸ்தீனர்களின் தாக்குதல்களில் 13 இஸ்ரேலியர்கள் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை நண்பகல் நேரத்திலேயே இஸ்ரேலிய சிறப்புப் படையினர் சுற்றுவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

இரு கார் வண்டியில் வந்த இராணுவத்தினர் வீடு வீடாக தேடுதலில் ஈடுபட்டதோடு நிதால் கசமின் தலையில் சூடு நடத்தினர் என்று பார்த்தவர் ஒருவர் விபரித்துள்ளார்.

இதில் இஸ்லாமிய ஜிஹாத் மற்றும் ஹமாஸ் போராட்டக் குழுக்களை சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டிருப்பதை பலஸ்தீன சுகாதார அமைச்சு உறுதி செய்திருப்பதோடு கொல்லப்பட்ட 16 வயது சிறுவன் எந்தத் தொடர்பும் அற்றவன் என்று குறிப்பிட்டுள்ளது.

Sat, 03/18/2023 - 14:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை