பெண்கள் மீதான தடைகள்: தலிபான் அரசுக்கு எதிராக பாதுகாப்பு சபை கண்டனம்

ஆப்கானிஸ்தானில் பெண்களை இலக்குவைத்து முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு ஐ.நா பாதுகாப்புச் சபை தலிபான் அரசுக்கு கண்டனம் வெளியிட்டுள்ளது.

பெண்கள் பல்கலைக்கழகம் செல்லத் தடை விதித்த தலிபான்கள் அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்களில் பணியாற்றுவதற்கும் பெண்களுக்கு கடந்த வாரம் தடை விதித்தது.

பெண்கள் கல்விக்கு எதிராக அதிகரிக்கும் கட்டுப்பாடுகள் ஆழ்ந்த கவலை அளிப்பதாக உள்ளது என்று 15 உறுப்பு நாடுகளைக் கொண்ட பாதுகாப்புச் சபை தெரிவித்துள்ளது.

தற்போதைய கட்டுப்பாடுகள் அகற்றப்பட வேண்டும் என்று ஐ.நா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார். புதிய கட்டுப்பாடுகள் நியாயப்படுத்த முடியாத மனித உரிமை மீறல்கள் என்றும் அவர் சாடியுள்ளார்.

இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை கூடிய பாதுகாப்புச் சபை வெளியிட்ட அறிவிப்பில், ஆப்கானில் பெண்களுக்கு முழுமையான, சமமான மற்றும் அர்த்தபூர்வமான பங்கு அளிக்கப்பட வேண்டும்” என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்களை மதித்து பாடசாலைகளை மீண்டும் திறக்கும்படியும், இந்தக் கொள்கைகள் மற்றும் செயற்பாடுகளை உடன் திரும்பப் பெற வேண்டும் என்றும் தலிபான்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

தலிபான்களின் தடையை அடுத்து ஆப்கானில் செயற்படும் குறைந்தது ஐந்து அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் ஆப்கானில் தனது பணிகளை ஏற்கனவே நிறுத்திக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Thu, 12/29/2022 - 12:48


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை