உறுதியான பெறுபேற்றுத்திறனை தொடர்ந்து பேணும் மக்கள் வங்கி

மக்கள் வங்கியானது 2022 ஆம் ஆண்டு செப்டெம்பர் 30 ஆம் திகதியுடன் முடிவடைந்த ஒன்பது மாத காலப்பகுதிக்கான பெறுபேறுகளை அறிவித்துள்ளதுடன், இது வங்கியின் தனிப்பதிவாக ரூபா 17.0 பில்லியன் மற்றும் திரட்டிய அடிப்படையில் ரூபா 21.0 பில்லியன் வரிக்கு முந்திய இலாபத்தை பதிவு செய்துள்ளது.

மொத்த தொழிற்பாட்டு வருமானம் 41.3வீதத்தினால் அதிகரித்து ரூபா 91.0 பில்லியனை எட்டியுள்ளது. அதே சமயம், மொத்த தொழிற்பாட்டுச் செலவுகள் 9.6 வீதம் மட்டுமே அதிகரித்து ரூபா 31.4 பில்லியனாக உயர்ந்துள்ளது. 70.0 வீதம் வரையான பணவீக்க அழுத்தத்திலிருந்து பிரதானமாக எழுந்த 80.0 வீத நாணயப் பெறுமதி வீழ்ச்சி அடங்கலாக மிகவும் சவால்மிக்க பொருளாதார சூழலுக்கு மத்தியில் மிகவும் அவதானமாக மேற்கொள்ளப்பட்ட செலவு முகாமைத்துவச் செயற்பாடுகளை இது பிரதிபலிக்கிறது.

2021 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் 52.3 வீதத்துடன் ஒப்பிடுகையில் முடிவடைந்த 9 மாத காலத்தில் வங்கியின் செலவு-வருமான வீதம் 40.9 வீதமாக காணப்பட்டது, இது வருமான வளர்ச்சி மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட செலவு அதிகரிப்பு ஆகிய இரண்டையும் பிரதிபலிக்கிறது.

2022 ஒன்பது மாதங்களில் தேறிய வட்டி வருமானம் 12.7 வீதத்தினால் அதிகரித்து ரூபா 66.5 பில்லியனை எட்டியது. அதே நேரத்தில் வட்டிச் செலவுகள் 89.6 வீதத்தினால் அதிகரித்தன. இதன் விளைவாக, தேறிய வட்டி இலாப மட்டங்கள் 2021 ஆம் ஆண்டின் அதே காலகட்டத்தில் காணப்பட்ட 3.27 வீதத்திலிருந்து 3.12 வீதமாக சரிவடைந்தன. கட்டணம் மற்றும் தரகு வருமானம், 2021 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் காணப்பட்ட ரூபா 5.6 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 128.0 வீதத்தினால் அதிகரித்து ரூபா 12.8 பில்லியனை எட்டியது.

இப்பெறுபேறுகள் குறித்து கருத்து தெரிவித்த மக்கள் வங்கியின் தலைவரான சுஜீவ ராஜபக்ஷ, 'அனைத்து புறக்காரணிகள் மற்றும் சூழ்நிலைகளை கருத்தில் கொள்கையில், வங்கியின் பெறுபேறுகள் குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்" என்றார்.

மக்கள் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் பொது முகாமையாளருமான ரஞ்சித் கொடித்துவக்கு இது தொடர்பில் கூறுகையில்'இந்த ஆண்டு பொருளாதாரம் நலிவுறும் நிலையில், பண மதிப்பிழப்பு பாதிப்பைத் தவிர்த்து, பெரும்பாலான ஐந்தொகைகள் சுருங்க வாய்ப்புள்ளது. நாங்கள் தற்போது மீட்சி காண்பதில் சரியான பாதையில் செல்கிறோம் என்பதில் நம்பிக்கையுடன் இருக்கிறோம்" என்றார்.

மக்கள் வங்கியானது 744 கிளைகள் மற்றும் சேவை மையங்களைக் கொண்ட இலங்கையின் மிகப் பெரிய வங்கிச்சேவை அடிச்சுவட்டைக் கொண்ட நாட்டின் முதன்மையான, உரிமம் பெற்ற வர்த்தக வங்கியாகும்.

Fri, 12/02/2022 - 12:08


copied Thinakaran.lk

கருத்துரையிடுக

புதியது பழையவை