சீனாவில் பயணிகள் கட்டுப்பாட்டில் தளர்வு

சீனா தனது கடுமையான கொவிட் கட்டுப்பாட்டை தளர்த்தும் நடவடிக்கையாக பயணிகளுக்கான தனிமைப்படுத்தலை வரும் ஜனவரி 8ஆம் திகதி தொடக்கம் கைவிடவுள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளாக எல்லைகள் மூடப்பட்டிருந்த நிலையில், வெளிநாட்டு பயணிகளுக்கு எல்லையை திறப்பதாக இந்தத் தளர்வு உள்ளது. எனினும் சீனாவில் நோய்த் தொற்று தீவிரம் அடைந்திருக்கும் நிலையிலேயே இந்தத் தளர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதன்படி சீனா வரும் சர்வதேச பயணிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படாது என்றும் 48 மணி நேரத்துக்குள் பெற்றுக்கொண்ட கொவிட் தொற்று ஏற்படவில்லை என்று உறுதி செய்யும் பீ.சி.ஆர் அறிக்கை ஒன்று போதுமானது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தவிர, சீனாவில் இருந்து மேற்கொள்ளப்படுகின்ற விமானப் பயணங்களுக்கான கட்டுப்பாடுகள் மற்றும் விமானப் பயணங்களின் கொள்ளளவு தொடர்பான கட்டுப்பாடுகளும் ஜனவரி 8 ஆம் திகதி தொடக்கம் அகற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனைகள் நிரம்பி இருப்பதாகவும் வயதானவர்கள் உயிரிழப்பதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. தரவுகளை வெளியிடுவதை சீனா நிறுத்திய நிலையில் தினசரி தொற்றாளர்கள் மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை பற்றிய விபரம் தெரியாதுள்ளது.

Wed, 12/28/2022 - 09:54


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை