சீனாவில் மீண்டும் கொவிட்; ஒரே நாளில் 29,000 பேருக்கு தொற்று

சீனாவின் வூஹான் நகரில் ஆரம்பித்த கொரோனா தொற்று உலகம் முழுவதும் ஆட்டிப்படைத்துவிட்டு தற்போது மீண்டும் சீனாவை உலுக்கத் தொடங்கியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் சீனாவின் உள்ளூர் நகரங்களில் மட்டும் 29,157 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிவாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.

உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் வூஹான் நகரில் ஏற்பட்டு அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை ஏற்படுத்தியது. கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக, உலக நாடுகள் தற்போது படிப்படையாக கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வருகின்றன.

எனினும், சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் 28,127 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இது கடந்த பல மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிக எண்ணிக்கையென தரவுகள் தெரிவிக்கின்றன.

இதன்படி கடந்த 24 மணி நேரத்தில் சீனாவின் உள்ளூர் நகரங்களில் 29,157 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 26,438 பேருக்கு அறிகுறி இல்லாத கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அங்கு கொரோனாவால் புதிதாக உயிரிழப்புகள் ஏற்படவில்லை. சீனாவில் இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,226 ஆக உள்ளது. மேலும் சீனாவில் இதுவரை உறுதி செய்யப்பட்ட கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 2,93,506 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Fri, 11/25/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை