இடம்பெயர்ந்த 2,71,171 குடும்பங்கள் மீள்குடியேற்றம்

வடக்கு, கிழக்கில் போரினால்

  •  மீள்குடியேற இன்னும் 2,327 குடும்பங்கள்...
  •  இடம்பெயர்ந்த குடும்பங்களை விரைவாக
  • மீள்குடியேற்றவும் நலன்புரி முகாம்களை மூடவும் திட்டம்...

யுத்தம் காரணமாக வடக்கு, கிழக்கிலிருந்து இடம்பெயர்ந்த 2,73,498 குடும்பங்களில் 2,71,171 குடும்பங்கள் தற்போது மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு

அமைச்சின் மீள்குடியேற்றப் பிரிவு தெரிவித்தது.

மீள்குடியேற்றப் பிரிவின் அறிக்கைகளின்படி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 2,327 குடும்பங்கள் இன்னும் மீள் குடியமர்த்தப்பட இருப்பதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சுட்டிக்காட்டியுள்ளார். அவர்களையும் மிக விரைவாக மீள்குடியேற்றுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இன்னும் மீள்குடியமர்த்தப்படவுள்ள 2,327 குடும்பங்களில் 152 குடும்பங்கள் இடம்பெயர்ந்தோருக்கான நலன்புரி முகாம்களிலே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். மிகுதி 2,175 குடும்பங்களும் நலன்புரி நிலையங்களில் சேராமல் உறவினர்களின் வீடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

மீள்குடியேற்ற பிரிவு 2187/27ஆம் இலக்க 09-08-2020ஆம் திகதிய விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டது.

வடக்கு மற்றும் கிழக்கில் ஏற்பட்ட மோதல் சூழ்நிலை காரணமாக இடம்பெயர்ந்த குடும்பங்கள் இந்தியாவுக்கும் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்றன.

புலம்பெயர்ந்த குடும்பங்களை அவர்களது சொந்த கிராமங்களில் குடியமர்த்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ஒழுங்கமைத்து ஒருங்கிணைக்கவும் மீள்குடியேற்றப் பிரிவு நடவடிக்கை எடுத்து வருகிறது.

அங்கு அவர்களுக்கு வீடுகள் மற்றும் தண்ணீர், மின்சாரம் மற்றும் கழிவறை வசதிகள் போன்ற அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்படுமென்றும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூறினார்.

யுத்த நிலைமை காரணமாக இடம்பெயர்ந்த 2,71,171 குடும்பங்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.. அவர்கள் வட மாகாணத்தில் யாழ். கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்டங்கள் மற்றும் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய 08 மாவட்டங்களில் குடியேறியுள்ளனர்

போரினால் இடம்பெயர்ந்து இந்தியாவில் தஞ்சம் புகுந்து திரும்பவும் இலங்கைக்கு வரும் குடும்பங்களுக்கும் இலங்கையில் தங்கியிருந்த குடும்பங்களுக்கும் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய 38,000 ரூபா அரசாங்கத்தின் உதவி பணம் தரப்படும். மேலும் அவர்களுக்கு அரசு சாரா நிறுவனங்கள் மூலமும் உதவித் தொகையும் வழங்கப்படுகிறது.

காணி வைத்திருப்பவர்களுக்கு தற்காலிக வீடு கட்ட 25,000 ரூபாவும், நிலத்தை சுத்தம் செய்ய 5,000 ரூபாவும், தேவையான உபகரணங்கள் வாங்க 3,000 ரூபா மற்றும் பிற உணவு அல்லாத பொருட்கள் வாங்க 5,000 ரூபாவும் நிதியுதவியாக வழங்கப்படுகிறது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெயர்ந்த வர்களுக்கான வீடுகள் பிரதேச செயலாளரின் பரிந்துரையின் பேரில் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அங்கிருந்து இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு மட்டுமே வீடுகள் வழங்கப்படுகின்றன.

இதன்படி இடம்பெயர்ந்தவர்களுக்காக 1,48,848 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இந்திய உதவி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவி மூலம் இந்த வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

Fri, 11/25/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை