'Yuan Wang 5' கப்பல் நாட்டுக்கு வருவதை ஒத்திவைக்குமாறு இலங்கை வேண்டுகோள்

- வெளிவிவகார அமைச்சு சீனத் தூதரகத்திடம் கோரிக்கை

'Yuan Wang 5' கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருவதை ஒத்திவைக்குமாறு, இலங்கைக்கான சீனத் தூதரகத்திடம் இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை வருமாறு,

2022 ஒகஸ்ட் 11 முதல் 17 வரை அம்பாந்தோட்டை துறைமுகத்தில் எரிபொருள் நிரப்பும் நோக்கத்திற்காக 'Yuan Wang 5' கப்பல் துறைமுக விஜயத்தை மேற்கொள்வதற்கான இராஜதந்திர அனுமதியை, கொழும்பில் உள்ள சீன மக்கள் குடியரசின் தூதரகத்திற்கு 2022 ஜூலை 12ஆம் திகதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சினால் தெரிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, மேலதிக ஆலோசனைகளின் தேவை காரணமாக குறித்த கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு செல்வதை ஒத்திவைக்குமாறு, கொழும்பில் உள்ள சீன மக்கள் குடியரசின் தூதரகத்திற்கு அமைச்சு தகவல் அனுப்பியுள்ளது.

2022 ஓகஸ்ட் 04ஆம் திகதி கம்போடியாவின் ஃபோன்ம் பென் (Phonm Penh) யில் இடம்பெற்ற இருதரப்பு சந்திப்பின் போது வெளிவிவகார அமைச்சர்களான அலி சப்ரி மற்றும் வாங் யீ (Wang Yi) ஆகியோரால் மீண்டும் வலியுறுத்தப்பட்டபடி, இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான நீடித்த நட்பு மற்றும் சிறந்த உறவுகளை உறுதியான அடித்தளத்தில் நிலைநிறுத்துவதற்கு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு விரும்புகின்றது.

இரண்டு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர்களுக்குமிடையிலான இந்த முதலாவது சந்திப்பில், நாட்டின் வெளியுறவுக் கொள்கையில் நிலையான கோட்பாடாக இருக்கும் ஒரே சீனா கொள்கை தொடர்பான இலங்கையின் உறுதியான அர்ப்பணிப்பை அமைச்சர் அலி சப்ரி இதன்போது சுட்டிக்காட்டியிருந்தார்.

Mon, 08/08/2022 - 22:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை