ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட கொள்கை வகுப்பாளர்கள் மக்களின் இறையாண்மைக்கு செவிசாய்க்க வேண்டும்

நீண்ட கால பணி பகிஷ்கரிப்பு செய்வதன் மூலம் தற்போதைய பொருளாதார நெருக்கடி இன்னும் மோசமாகும் என கூட்டு ஆடை சங்கங்களின் மன்றம் அறிவுறுத்தியுள்ளது

உலகை வியப்பில் ஆழ்த்திய படைப்புக்களை நிர்மாணித்த இலங்கைக்கு, அந்த பெருமைமிகு பயணத்தின் 2500 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையானது உண்மையிலேயே மனம் வருந்தக்தக்கது. பொருளாதார நெருக்கடியாக ஆரம்பித்து, இன்று அரசியல் நெருக்கடியாக மாறியுள்ளதுடன் ஒட்டுமொத்த இலங்கையர்களும் தமது எதிர்காலம் தொடர்பாக இப்போது நம்பிக்கையற்றுள்ளனர். நாட்டின் சட்டங்களை இயக்கும் பிரதான சட்டவாக்க நிறுவனமான நாடாளுமன்றமோ அல்லது உலகின் எந்தவொரு ஜனநாயக நாட்டின் ஜனாதிபதிக்கும் இல்லாத அளவு முழுமையான நிறைவேற்று அதிகாரங்களை தன்வசம் கொண்டுள்ள ஜனாதிபதியிடமோ அதற்கு சாதகமான செயற்திட்டமொன்றை காண முடியாதுள்ளது. ஆகையால் நெருக்கடி மத்தியில் வாழ்ந்து போராட்டத்தில் ஈடுபடும் இலட்சக்கணக்கான இலங்கையர்களின் குரல்களுக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் செவிசாய்க்க வேண்டுமே தவிர அவர்களுக்கு மாற்று வழி இல்லை என்பதை கூட்டு ஆடை சங்கங்களின் மன்றமான நாம் தெரிவிக்கின்றோம். அத்துடன் நீண்டகால பகிஷ்கரிப்பிற்கு நாட்டை தள்ளுவதன் ஊடாக நாடு என்ற வகையில் எமது அழிவு துரிதப்படுமே தவிர நெருக்கடியை தீர்ப்பதற்கு அது எவ்விதத்திலும் உதவாது என்பதை நாம் மீளவும் வலியுறுத்துகிறோம்.

அதிகார மோகம், தமது தொழிற்சங்க செயற்பாடுகளுக்கு, அரசியல் கட்சிகளுக்கு கிடைக்கும் சலுகைகள் தொடர்பாக சிந்திக்காமல் நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள பொருளாதார, அரசியல் நெருக்கடி நிலைமைகளை துரிதமாக தீர்ப்பதற்கு பொது கட்டமைப்பை உருவாக்க இணையுமாறு நாம் அனைத்து தரப்பினரிடமும் வேண்டுகோள் விடுக்கின்றோம். தமது தனிப்பட்ட அரசியல் ஆசைகளுக்கு அப்பால் மக்கள் மீது அன்பு செலுத்துவதே முக்கியம் என நாம் எடுத்துரைக்கின்றோம். அத்துடன் நீண்டகால வேலை நிறுத்தங்களுக்கு மக்களை அழைத்துச் செல்லும் நிர்வாக கட்டமைப்பு மற்றும் தொழிற் சங்கங்கள் இதன் விளைவுகளை மக்களிடம் மறைப்பதில் அர்த்தமில்லை. நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார கட்டமைப்பும் சீரழிந்து வருவதால் மேலும் மோசமான விளைவுகளை நாட்டு மக்கள் சந்திக்க வேண்டி வரும். நிலவுகின்ற அரசியல், பொருளாதார நெருக்கடியை வெற்றி கொள்வதற்கான வழியாக இது அமையாது என இந்நாட்டுக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் துறை என்ற வகையில் நாம் நம்புகின்றோம். 

ஜனாதிபதி, பிரதமர் உட்பட ஆளும் அதிகாரத்தை கொண்டவர்கள் மக்கள் ஆணையின் குரலுக்கு செவிசாய்க்க வேண்டும் என்பதுடன் தமது கட்சியின் அல்லது எதிர்கால பலத்தை கைப்பற்றுவதற்கானதொரு தனிநபரை முன்னிலைப்படுத்துவதைவிட மக்கள் நம்பிக்கையை வெல்லும் சிறந்த அரச நிர்வாக கட்டமைப்பை துரிதமாக நிறுவ வேண்டும். அத்துடன் நெருக்கடிக்கு தீர்வு காண அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர நெருக்கடியின் பங்காளிகளாக மாறக்கூடாது என்பதையும் நாம் தெரிவிக்கின்றோம்.

மக்கள் ஆணையை செயற்படுத்துவற்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த பிரதிநிதிகள் மக்கள் தமக்கு வழங்கிய ஆணையை அரசியல் கட்சிக்காக அல்லது தனிநபரின் விருப்பிற்காக பயன்படுத்துவது சிறந்த நடவடிக்கையல்ல. அவர்கள் மக்கள் வழங்கிய ஆணையை நிறைவேற்ற தற்போதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்;ற கோரிக்கையை நாம் முன்வைக்கின்றோம். நாடாளுமன்றத்தில் நிலவும் அதிகாரம் மக்களின் நன்மைக்காகவே பயன்படுத்தப்பட வேண்டும். அத்துடன் நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார, அரசியல் நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுக்கும் செயற்திட்டமொன்றை துரிதமாக செயற்படுத்த வேண்டும். எனவே இந்த நெருக்கடியிலிருந்து வெளியே வர துரிதமாக கொள்கைகளை வகுக்க வேண்டும். அத்துடன் நாட்டின் பொருளாதரத்தை சீராக நடத்திச் செல்வதற்கு ஏற்றுமதி பிரிவு அடங்கலாக ஒட்டுமொத்த தனியார் துறைக்கு எவ்வித தடங்களுமின்றி அவர்கள் நாட்டுக்கு வழங்கும் பொருளாதார பங்களிப்பை அதேமாதிரி கொண்டு செல்வதற்கு அவர்களுக்கு உதவ வேண்டும். 

நிறைவேற்று வழங்கும் கட்டளைகளை செயற்படுத்தும் அரச சேவையின் செய்திறன் மற்;றும் துரிதமாக தேவைப்படும் பொருளாதார மற்றும் அரசியல் சீர்திருத்தங்கள் செயல்படுத்தப்பட வேண்டும். தமது முன்னணி பொறுப்பானது மக்களின் நலன் சார்ந்தே உள்ளது என்பதால்  பொது மக்கள் தொடர்பாக அக்கறையுடன் செயற்படுமாறு நாம் அரச ஊழியர்களிடமும் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

பல வருடங்களாக பல அரசாங்கங்கள் எடுத்த சமூக, பொருளாதாரம் சார்ந்த தவறான தீர்மானிங்களின் பலனையே நாம் தற்போது அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம். ஆகையால் இந்த அனைத்து நெருக்கடிகளும் ஓர் இரவில் தீர்வு கிடைக்காது. பல காலங்களுக்கு எமக்கு பாரிய சவாலாக விளங்கும். இருந்தாலும் தனிநபர்களாகவும், சமூகமாகவும் அர்ப்பணிப்பின்றி வெற்றியின் பாதைக்கு வருவது கடினமானது. நெருக்கடியின் மத்தியில் கூட எதிர்பார்புடன் செயற்படுத்தப்படுகின்ற பொருளாதார கியர்களை வேகமாக செயற்படுத்த வேண்டிய பொறுப்பு ஆளும் தரப்பிற்கும், ஒட்டுமொத்த மக்களுக்கும் உள்ளது. நெருக்கடியிலிருந்து வெளியே வருவதற்கு உள்ள ஒரே வழி, நாட்டின் பொருளாதாரத்தை நல் வழிப்படுத்துவது மட்டுமே என கூட்டு ஆடை சங்கங்களின் மன்றம் அறிவுறுத்தியுள்ளது. இதற்கான மாதிரியை, அதிகாரத்திலுள்ள தலைமைத்துவமே வழங்க வேண்டும். ஆட்சியாளர்கள் என்பவர்கள் மக்கள் இறையாண்மையின் பாதுகாவலர்களே தவிர அவர்கள் அதன்; உரிமையாளர்கள் அல்ல என்பதை நாம் வலியுறுத்துகிறோம்.

தற்போதுள் நாம் உள்ள நிலையிலிருந்து வெளியே வரும் பொறுப்பு அனைத்து இலங்கையர்கள் மீதும் உள்ளதுடன் ஒவ்வொரு பிரஜையும் தமது பொறுப்புக்களை நாட்டுக்காக செய்யும்போது மட்டுமே நாம் வீழ்ந்துள்ள இந்த நெருக்கடியிலிருந்து வெளியே வர முடியும் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

Mon, 05/09/2022 - 16:28


copied Thinakaran.lk

கருத்துரையிடுக

புதியது பழையவை