ரஷ்ய எண்ணெய் மீது தடை: ஐரோப்பிய திட்டம் வெளியீடு

உக்ரைன் போருக்கு எதிரான பதில் நடவடிக்கையாக ரஷ்ய எண்ணெய்க்கு ஐரோப்பிய ஒன்றியம் படிப்படியாக தடை விதிக்கும் என்று ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா வொன் டெர் லெயேன் தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த முன்மொழிவுக்கு ஏகமனதாக ஒப்புதல் தேவை என்பதோடு இது கடும் விவாதத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.

பிரான்ஸின் ஸ்ட்ரஸ்பேர்கில் உள்ள ஐரோப்பிய பாராளுமன்றத்தில் உரையாற்றிய வொன் டெர் லெயேன் இதனைத் தெரிவித்தார். இதில் 27 அங்கத்துவ நாடுகளில் சில நாடுகள் எரிசக்திக்காக ரஷ்யாவில் அதிகம் தங்கி இருப்பதால் இந்தத் தடை இலகுவானதாக அமையாது என கூறப்படுகிறது.

எனினும் ஆறு மாதத்திற்குள் ரஷ்யாவின் மசகு எண்ணெய்யை முழுமையாக கைவிடவும் ஆண்டு இறுதியில் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்யை கைவிடவும் ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டுள்ளது.

“ஒழுங்கான வடிவம் ஒன்றில் ரஷ்ய எண்ணெய்யை கைவிடுவதை நாம் உறுதி செய்வோம்” என்று வொன் டெர் லெயேன் கூறினார். ரஷ்யாவுக்கு எதிரான ஆறு கட்ட தடைகளை ஐரோப்பிய பாராளுமன்றத்தில் முன்வைத்து உரையாற்றும்போது அவர் இதனைத் தெரிவித்தார்.

எனினும் ரஷ்ய எரிபொருள்கள் மீதான தடைக்கு ஹங்கேரி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் ரஷ்ய எண்ணெய்யில் அதிகம் தங்கியுள்ள ஸ்லோவாக்கியா மற்றும் ஹங்கேரிக்கு இந்த தடையில் இருந்து விலக்கு அளிப்பது பற்றி அவர் எந்த கருத்தும் கூறவில்லை. எனினும் இந்த நாடுகள் மாற்று ஆதாரம் ஒன்றை பெறுவதற்கு நீண்ட கால அவகாசம் வழங்கப்பட வாய்ப்பு உள்ளது.

Thu, 05/05/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை