நம்பிக்கையில்லா பிரேரணை: ஆட்சியில் இருந்து நீக்கப்பட்ட முதல் பாகிஸ்தான் பிரதமர்

Imran Khan Becomes Pakistan 1st Prime Minister to be Voted Out of Power

- 342 எம்.பிக்களில் 174 பேர் பிரேரணைக்கு ஆதரவு
- இம்ரான் கானின் PTI அதிருப்தியாளர்கள் வாக்களிக்கவில்லை

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக எதிர்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு கடந்த ஒரு மணி நேரத்தில் வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 342 உறுப்பினர்களைக் கொண்ட அவையில் 174 உறுப்பினர்கள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இம்ரான் கான் பாகிஸ்தான் பிரதமர்

இதன் மூலம் ஆட்சியில் இருந்து வெளியேற்றப்படும் முதலாவது பிரதமராகியிருக்கிறார் இம்ரான் கான்.

இந்த அமர்வை வழிநடத்தும் தலைவராக செயல்பட்ட PMLN கட்சியின் அயாஸ் சாதிக், வாக்கெடுப்பு முடிவை அறிவித்தார்.

PMLN கட்சியின் செய்தித் தொடர்பாளர் மரியம் ஔரங்கசீப்பின் கூற்றுப்படி, சாதிக் அமர்வுக்கு தலைமை தாங்கியதால் வாக்களிக்க முடியவில்லை. இம்ரான் கானின் PTI கட்சியின் அதிருப்தி உறுப்பினர்களும் வாக்களிக்கவில்லை.

புதிய பிரதமரை தேர்ந்தெடுக்கும் வகையில், நாளை (11) திங்கட்கிழமை காலை 11 மணி வரை நாடாளுமன்ற அமர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான்

நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் பிஎம்எல்-நவாஸ் கட்சித் தலைவர் ஷபாஸ் ஷெரீஃப் தெரிவிக்கையில், "நாடு ஒரு புதிய நாளைக் காண்கிறது. அரசாங்கத்திற்கு எதிரான கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சிகளுக்கு ஒத்திழைத்த அனைத்து எதிர்கட்சித் தலைவர்களுக்கும் நன்றி," என்று தெரிவித்தார். "இந்த புதிய நாளைக் காண எங்களை அனுமதித்ததற்காக அல்லாஹ்வுக்கு நன்றி சொல்லாமல் இறுக்க முடியாது" என்றும் ஷபாஸ் ஷெரீஃப் தெரிவித்தார்.

"அனைவருக்கும் அவர்களின் தியாகங்களுக்காக நாங்கள் நன்றி கூறுகிறோம், இப்போது மீண்டும், அரசியலமைப்பு மற்றும் சட்டத்தின் அடிப்படையில் ஒரு பாகிஸ்தான் ஆளுகை நடைமுறைக்கு வர உள்ளது," என்று அவர் குறிப்பிட்டார். "நேரம் வரும்போது, ​​நாங்கள் விரிவாகப் பேசுவோம், ஆனால் தேசத்துக்கு ஏற்பட்ட காயங்களைக் குணப்படுத்த விரும்புகிறோம்; நாங்கள் அப்பாவிகளை சிறைக்கு அனுப்ப மாட்டோம், நாங்கள் பழிவாங்க மாட்டோம்," என்று ஷபாஸ் தெரிவித்தார். சட்டம் பாதுகாக்கப்படும். அது தனது கடமையை எவ்வித குறுக்கீடுமின்றி செய்ய அனுமதிக்கப்படும்," என்றார் ஷபாஸ் ஷெரீஃப். "நானோ, பிலாவலோ, மௌலானா ஃபஸ்லுர் ரஹ்மானோ நீதி விவகாரத்தில் தலையிடமாட்டோம். சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்படும், நீதித்துறையை மதிப்போம்" என்றும் ஷபாஸ் கூறினார்.

பாகிஸ்தான்

இதைத்தொடர்ந்து பேசிய பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் பிலாவல் பூட்டோ, வரலாற்றில் ஏப்ரல் 10 என்ற நாள் இடம்பெறும் என்று கூறி இதேபோல முந்தைய காலத்தில் நடந்த நிகழ்வை நினைவு கூர்ந்தார், இந்த நாளில்தான், 1973ஆம் ஆண்டு அரசியலமைப்பை நாடு அங்கீகரித்தது என்று பிலாவல் கூறினார்.

"1986ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி, பெனாசிர் பூட்டோ தனது சுயமாக மேற்கொண்ட நாடு கடத்த செயல்பாட்டை முடித்துக்கொண்டு ஜியாவுல் ஹக்கிற்கு எதிரான தனது போராட்டத்தைத் தொடங்க லாகூருக்கு வந்தார்" என்று பிலாவல் கூறினார்.

கடந்த 50 ஆண்டுகளில் பாகிஸ்தானில் எந்தவொரு பிரதமரும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மூலம் பதவி நீக்கம் செய்யப்பட்டது இல்லை.

1989இல் பெனாசீர் பூட்டோ, 2006இல் ஷெளகத் அஜீஸ் ஆகியோருக்கு எதிராக எதிர்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தபோது அதில் அவர்கள் வென்றனர். இவர்களின் வரிசையில் தற்போது எதிர்கட்சிகளின் நம்பிக்கை இல்லா தீர்மான வாக்கெடுப்பை எதிர்கொண்ட இம்ரான் கான், விதிவிலக்காக பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறியதால் ஆட்சியில் தொடரும் வாய்ப்பை இழந்துள்ளார்.

முன்னதாக, தனது ராஜிநாமாவை அறிவிப்பதற்கு முன், அமைச்சரவையில் இருந்து "முக்கியமான ஆவணங்களை" கிடைக்கப் பெற்றதாகக் கூறினார், அதை பார்க்க வேண்டும் என்று எதிர்கட்சித் தலைவரையும் பாகிஸ்தான் தலைமை நீதிபதியையும் கைசர் அழைத்தார்.

சபாநாயகர் பதவி விலகல்
"நமது சட்டம் மற்றும் தாய்நாட்டுக்காக நிற்கும் நோக்கத்துடன், சபாநாயகர் பதவியில் நீடிக்க முடியாது என்று முடிவெடுத்து எனது பதவியை ராஜிநாமா செய்ய முடிவு செய்துள்ளேன்,'' என்று அவர் கூறினார்.

இது ஓர் தேச கடமை மற்றும் உச்ச நீதிமன்றத்தின் முடிவு என்பதால், அவையை வழிநடத்தும் குழுவில் உள்ள அயாஸ் சாதிக்கிடம் இந்த அமர்வை நடத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளதாகவும் அசாத் கைசர் தெரிவித்தார்.

இதையடுத்து அவையை வழிநடத்திய அயாஸ் சாதிக், மிகுந்த மரியாதையுடனும் எதிர்கட்சிகளுடன் இணைந்தும் அவையை இதுவரை வழிநடத்தி வந்ததற்காக அசாத் கைசருக்கு நன்றி தெரிவித்தார்.

காலையில் கூட்டப்படும் அவை, நள்ளிரவைக் கடந்தும் இயங்கக் கூடாது என்ற அவையின் மரபுக்கு ஏற்ப, நள்ளிரவு 12 மணிக்கு முன்பாக, சரியாக 11.58 மணிக்கு அவையை ஒத்திவைத்த அயாஸ் சாதிக், பிறகு 12.02 மணிக்கு மீண்டும் அமர்வைக் கூட்டினார்.

இதைத்தொடர்ந்து வாக்கெடுப்புக்கான நடைமுறைகளை தொடங்க அவர் அனுமதியளித்தார்.

உச்ச நீதிமன்றத்தை நள்ளிரவில் திறக்க நடவடிக்கை
முன்னதாக, பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்த தேசிய அவையில் சபாநாயகர் அசாத் கைசர் இன்னும் அனுமதிக்காததால், உச்ச நீதிமன்றத்தின் கதவுகளை சனிக்கிழமை நள்ளிரவைக் கடந்த இரவு 12 மணிக்கு திறக்க பாகிஸ்தான் தலைமை நீதிபதி முடிவு செய்தார்.

இதற்கிடையே, பாகிஸ்தான் நாடாளுமன்றமான தேசிய அவையின் அமர்வு இரவு 9:30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது, சனிக்கிழமை மட்டும் நான்கு முறை நாடாளுமன்ற அலுவல் ஒத்திவைக்கப்பட்டது.

342 இடங்கள் கொண்ட சட்டசபையில் 172 உறுப்பினர்களுக்கு மேல் ஆதரவு இருப்பதாக பாகிஸ்தான் எதிர்க்கட்சி கூறியது.

இந்த அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் சனிக்கிழமை இரவு 11:14 மணி நிலவரப்படி அந்நாட்டின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உமர் அட்டால் பண்டியால், பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தை அடைந்தார்.

இதற்கு இடையே, பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் கமர் ஜாவேத் பாஜ்வா, பிரதமர் இல்லத்தில் இம்ரான் கானைச் சந்தித்தார். பிறகு அவர் பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்தில் இருந்து தமது தனி குடியிருப்புக்கு சென்றதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.

தாமதமாக தொடங்கிய அமர்வு
முன்னதாக, நாடாளுமன்ற சபாநாயகர் ஆசாத் கெய்சர் இன்று காலை 10:30 மணிக்கு, பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க, புனித குர்ஆன் வரிகளை ஓதி கூட்ட அமர்வை தொடங்கி அவை அலுவலுக்கு தலைமை தாங்கினார்.

இதைத்தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்ட அவை, இரண்டு மணி நேர தாமதத்திற்குப் பிறகு மீண்டும் கூடியது. அப்போது அவைக்கு மூத்த உறுப்பினர் அம்ஜத் அலி கான் நியாஜி தலைமை தாங்கினார்.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு இன்றைய நாடாளுமன்ற கூட்ட நிகழ்ச்சி நிரலில் நான்காவது விடயமாக இடம்பெற்றது. எதிர்கட்சிகள் முழு பலத்துடன் அவைக்கு வந்திருந்த வேளையில், ஆளும் கட்சி உறுப்பினர்கள் வெகு சிலரை அவையில் இருந்தனர். பிரதமர் இம்ரான் கான் மாலை 5 மணிவரை நிகழ்வில் பங்கெடுக்கவில்லை.

சனிக்கிழமை காலையில் அவை கூடியபோதும் இதே விவகாரத்தை எதிர்கட்சிகள் எழுப்பினர். ஆளும் கட்சியினர் பெரும்பாலும் அவைக்கு வரவில்லை. இதனால், இரு தரப்பு பிரதிநிதிகளை தமது அறையில் அழைத்து சபாநாயகர் பேசினார். இதற்கு ஏதுவாக பகல் 12:30 மணி வரை நாடாளுமன்ற அமர்வு ஒத்திவைக்கப்பட்டது.

சபாநாயகர் அறையில் நடந்த கூட்டத்தில் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி, ஆளும் பிடிஐ தலைவர் அமீர் டோகர் ஆகியோர் ஆளும் கட்சி சார்பிலும், பிலாவல் பூட்டோ-சர்தாரி, ராணா சனாவுல்லா, அயாஸ் சாதிக், நவீத் கமர் மற்றும் மௌலானா ஆசாத் மஹ்மூத் ஆகியோர் எதிர்கட்சி சார்பிலும் கலந்து கொண்டனர். கலந்து கொண்டனர்.

இதையடுத்து பிற்பகலில் நாடாளுமன்ற அமர்வு கூடியபோது பேசிய பிஎம்எல் நவாஸ் கட்சியின் மூத்த உறுப்பினர் கவாஜா சாத் ரஃபீக், இஃப்தாருக்குப் பிறகு நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று சபாநாயகர் உறுதியளித்ததாகக் கூறினார்.இதற்கிடையே, நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ரத்து செய்த துணை சபாநாயகரின் ஏப்ரல் 3 உத்தரவை ரத்து செய்த தேசிய அவையின் கூட்டத்தை கூட்ட அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை எதிர்த்து ஆளும் கட்சி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

அவையில் என்ன நடந்தது?
இன்று நண்பகலில் அவை ஒத்திவைக்கப்பட்ட பிறகு நாடாளுமன்ற அமர்வு மீண்டும் தொடங்கியதும், சில உறுப்பினர்கள் பண ஆதாயத்திற்காக தங்களுடைய விசுவாசத்தை மாற்றிக்கொண்டார்கள் என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி குற்றம்சாட்டினார்."அரசியலமைப்பை உறுதிப்படுத்துவோம் என்று சபதம் எடுத்த அவர்கள் இந்த அவை சந்தை போல ஆவதை பார்க்கவில்லையா?" கடந்த ஆண்டு செனட் தேர்தல்களின் போது எப்படி வாக்குகள் வாங்கப்பட்டன மற்றும் விற்கப்பட்டன என்பதை தேசம் நன்கு அறிந்திருப்பதாக குரேஷி கூறினார். "நாங்கள் ஆட்சேபனைகளை எழுப்பினோம் [...] உறுப்பினர்கள் பேரம் பேசப்படும் காணொளிகளை பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தில் (ECP) வழங்கினோம். ஒரு வருடமாக தேர்தல் ஆணையத்தின் கதவுகளைத் தட்டிக் கொண்டே இருந்தோம். நீண்ட இழுபறிக்குப் பிறகு வழக்குகள் முடிவடைந்தன. [ஆனால்] ஓராண்டு கடந்த பிறகும் அவற்றின் மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுவரை எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை, "என்று குரேஷி குறிப்பிட்டார்.

எதிர்கட்சித் தலைவர் ஷெபாஸ் ஷெரீப் பேசுகையில், "நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிராகரிப்பதற்கான துணை சபாநாயகரின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நிராகரித்த 'வியாழக்கிழமையை' ஒரு வரலாற்றுபூர்வ நாள்" என்று அழைத்தார். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு பாகிஸ்தானின் எதிர்காலத்தை "பிரகாசமாக" மாற்றியுள்ளதாக அவர் கூறினார்.

துணை சபாநாயகரின் தவறான முடிவுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்த பிற எதிர்கட்சித் தலைவர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

"இந்த நாடாளுமன்றம் வரலாற்றை எழுதப்போகிறது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு இணங்க நடவடிக்கைகளை சபாநாயகர் மேற்கொள்ள வேண்டும். சபாநாயகர் தனது பங்களிப்பை வழங்கி, "வரலாற்றில் பொன்னான வார்த்தைகளால் எழுதப்பட்ட" பெயரைப் பெற வேண்டும்," என்று அவர் வலியுறுத்தினார்.

"இந்த தருணத்தை நீங்கள் உறுதியுடனும், முழு இதய சுத்தியுடனும் அணுக வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரின் சொல்படி செயல்பட வேண்டாம், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகள் தெளிவாக உள்ளன," என்று அவர் பேசினார்.

வசை பாடிய மர்யம்

பாகிஸ்தான் மர்யம்

இதேவேளை, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் (பிஎம்எல்-என்) துணைத் தலைவர் மர்யம் நவாஸ் ஷெரீப், இம்ரான் கானின் செயல்பாட்டை கடுமையாகச் சாடி அவர் கருத்துகளை வெளியிட்டுள்ளார். உச்ச நீதிமன்ற உத்தரவை மீறினால் மோசமான விளைவுகள் ஏற்படும் என்று அவர் எச்சரித்தார். பிரதமர் இம்ரான் கான் தனக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்கொள்வதற்கு பயந்து, நாட்டின் ஒட்டுமொத்த அமைப்பையே முடக்கிவிட்டார் என்று மர்யம் கூறினார்.

22 கோடி மக்கள்தொகை கொண்ட நாட்டில் பல வாரங்களாக அரசாங்கமே இல்லை என்று மர்யம் தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

மேலும், இம்ரான் கான் ஒரு பிரதமராகவோ அல்லது முன்னாள் பிரதமராகவோ கருதப்படாமல், தன்னைக் காப்பாற்றிக் கொள்ள ஒட்டுமொத்த நாட்டையும் பணய கைதியாக வைத்திருக்கும் மனநோயாளியாக கருதப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். புத்தி இல்லாதவ ஒருவர், முழு நாட்டையும் அழிக்க அனுமதிக்கக் கூடாது என்று அவர் சாடினார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு இந்தியா என்றால் மிகவும் பிடிக்கும் என்றால் அவர் பாகிஸ்தானை விட்டு அங்கேயே செல்ல வேண்டும் என்று மர்யம் கூறினார்.

இந்திய மக்களவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வாஜ்பேிய பிரதமராக இருந்தபோது அவரது அரசாங்கம் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறத் தவறிய நேரத்தில், இந்திய அரசியலமைப்பின்படி முன்னாள் இந்தியப் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் ராஜிநாமா செய்ததை முன்மாதிரியாகக் குறிப்பிட்டு இம்ரான் கானை கடுமையாக சாடினார் மர்யம் நவாஸ்.

பாகிஸ்தானில் என்ன நடக்கிறது? சில வரிகளில்

  • பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் ஆளும் இம்ரான் கான் அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு மொத்தம் உள்ள 342 உறுப்பினர்களில் 174 உறுப்பினர்களின் ஆதரவு அளித்துள்ளனர். நள்ளிரவு 12 மணியைக் கடந்த நிலையில் நடந்த வாக்கெடுப்பில் இம்ரான் கான் கட்சியின் அதிருப்தி உறுப்பினர்கள் வாக்களிக்கவில்லை.
  • பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் ஆளும் இம்ரான் கான் அரசாங்கம் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை எதிர்கொள்வதற்கான விவாதத்தை எதிர்கொண்டது. சனிக்கிழமை மட்டும் நான்கு முறை நாடாளுமன்ற கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
  • இம்ரான் கானின் பாகிஸ்தான் டெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சி இந்த மாத தொடக்கத்தில் நாடாளுமன்றத்தில் அதற்குள்ள பெரும்பான்மையை இழந்தது. ஆளும் கட்சியைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட எம்.பிக்கள் தாங்கள் கட்சி மாறி வாக்களிக்கப் போவதாக குறிப்பிட்டுள்ளனர்.
  • 342 உறுப்பினர்கள் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் 172க்கும் அதிகமான வாக்குகள் தங்கள்வசம் இருப்பதாக எதிர்கட்சி கூறியது. அதனடிப்படையில் ஆளும் அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டுமானால், இந்த பலத்தில் (கோரம் ஒன்றிற்கு கால் பங்கு உறுப்பினர்கள்) கால் பங்கு உறுப்பினர்கள் அவையில் இருக்க வேண்டும்.
  • கடந்த வெள்ளிக்கிழமை இரவு நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றிய இம்ரான் கான், நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்க பாகிஸ்தானின் மக்களுக்கு அழைப்பு விடுத்தார். பொதுமக்கள் நாட்டை பாதுகாக்க, ஞாயிற்றுக்கிழமை வீதிகளுக்கு வந்து "இறக்குமதி செய்யப்படும் அரசாங்கத்திற்கு" எதிராக அமைதியான முறையில் போராட்டம் நடத்துமாறு இம்ரான் கான் கேட்டுக்கொண்டார்.
  • வெளிநாட்டு சக்திகள் தனது அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சிப்பதாகவும், அதை நிறைவேற்ற பாகிஸ்தானின் சட்டமியற்றுபவர்கள் (எம்பிக்கள்) செம்மறி ஆடுகளைப் போல பேரம் பேசி வருவதாகவும் பிரதமர் கான் குற்றம்சாட்டினார்.
  • முன்னதாக, தன்னை பதவி நீக்கம் செய்ய வகை செய்யும் நாடாளுமன்ற நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பைத் தடுக்கும் வகையில் இம்ரான் கான் மேற்கொண்ட நடவடிக்கையை உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை ரத்து செய்தது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆளும் கட்சியைச் சேர்ந்த துணை சபாநாயகர் நிராகரித்தது அரசியலமைப்புக்கு எதிரானது என பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. தேசிய அவையை மறுசீரமைக்க ஏதுவாக ஒரு கூட்டத்தை அழைக்கவும் சபாநாயகருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
  • நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பில் இம்ரான் கான் தோல்வியுற்றதால், அந்நாட்டின் பிரதமராக ஒருவரை எதிர்கட்சி தேர்வு செய்யலாம். அதன் மூலம் 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை எதிர்கட்சியால் ஆளும் அதிகாரத்தை கையில் வைத்திருக்க முடியும், அந்த தேதிக்குள் புதிய தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். (BBC)
Sun, 04/10/2022 - 11:48


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை