பாகிஸ்தானின் புதிய பிரதமரை தேர்வு செய்யும் வாக்கு இன்று

பாகிஸ்தான் பிரதமர் பதவியில் இருந்து இம்ரான் கான் நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் நீக்கப்பட்ட நிலையில் பாகிஸ்தான் பாராளுமன்றம் இன்று திங்கட்கிழமை கூடி, புதிய பிரதமரை தேர்வு செய்வதற்காக வாக்கெடுப்பை நடத்தவுள்ளது.

இந்நிலையில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் மற்றும் அளுங்கட்சியைச் சேர்ந்த சபாநாயகர்கள் இல்லாத நிலையில், பிரதமர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்பு மனுக்களை ஞாயிற்றுக்கிழமை மு.ப. 11க்கு தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று சட்டசபை கூட்டத்திற்கு தலைமை தாங்கிய அயாஸ் சாதிக் தெரிவித்துள்ளார்.

நேற்று அதிகாலையில் இடம்பெற்ற நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் தோல்வி அடைந்த நிலையிலேயே இம்ரான் கான் தனது பதவியை இழந்துள்ளார். 69 வயதான கானின் கூட்டணி கட்சிகள் கைவிட்ட நிலையிலேயே அவர் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்தார்.

நாட்டின் பொருளாதார சீர்கேடு மற்றும் தமது வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதாக இம்ரான் கான் மீது குற்றம்சாட்டப்படுகிறது.

இதன்போது பெரும் இழுபறிகளுக்கு மத்தியிலேயே நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. தொடர்ச்சியான தாமதங்களுக்கு மத்தியில் 13 மணி நேரம் நீடித்த பாராளுமன்ற அமர்வில் நேற்று அதிகாலை 1 மணிக்கே வாக்கெடுப்பு இடம்பெற்றது.

முன்னதாக, பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்த தேசிய அவையில் சபாநாயகர் அசாத் கைசர் இன்னும் அனுமதிக்காததால், உச்ச நீதிமன்றத்தின் கதவுகளை சனிக்கிழமை நள்ளிரவைக் கடந்த இரவு 12 மணிக்கு திறக்க பாகிஸ்தான் தலைமை நீதிபதி முடிவு செய்தார்.

இதற்கிடையே, பாகிஸ்தான் பாராளுமன்றமான தேசிய அவையின் அமர்வு இரவு 9.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது, சனிக்கிழமை மட்டும் நான்கு முறை பாராளுமன்ற அலுவல் ஒத்திவைக்கப்பட்டது.

மொத்தம் உள்ள 342 உறுப்பினர்களைக் கொண்ட அவையில் 174 உறுப்பினர்கள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர். இந்த அமர்வை வழிநடத்தும் தலைவராக செயல்பட்ட பி.எம்.எல்-என் கட்சியின் அயாஸ் சாதிக், வாக்கெடுப்பு முடிவை அறிவித்தார்.

இதற்கு இடையே, பாகிஸ்தான் இராணுவ தளபதி ஜெனரல் கமர் ஜாவேத் பாஜ்வா, பிரதமர் இல்லத்தில் இம்ரான் கானைச் சந்தித்தார். பின்னர் அவர் பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்தில் இருந்து தமது தனி குடியிருப்புக்கு சென்றதாக உள்ளுர் ஊடகங்கள் தெரிவித்தன.

வரும் 2023 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் வரை பாராளுமன்றத் தேர்தல் நடைபெறாது. முன்கூட்டிய தேர்தலை விரும்புவதாக எதிர்க்கட்சி கூறியபோதும், நீதி மற்றும் நியாயமான தேர்தலை உறுதி செய்ய வேண்டி இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

கானின் வெளியேற்றம் பாகிஸ்தான் வரலாற்றின் தொடர்ச்சியான அரசியல் ஸ்திரமற்ற சூழலை காட்டுவதாக உள்ளது. பாகிஸ்தான் சுதந்திரம் பெற்றது தொடக்கம் எந்தப் பிரதமரும் தமது முழுமையான தவணைக் காலத்தையும் பூர்த்தி செய்ததில்லை. எனினும் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் பதவி நீக்கப்படும் முதல் பிரதமராக இம்ரான் கான் உள்ளார்.

பாகிஸ்தானின் சுதந்திரத்தின் பின்னரான 75 ஆண்டு காலத்தில் கிட்டத்தட்ட பாதி அளவான காலம் இராணுவ ஆட்சியே இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

2018ஆம் ஆண்டு இராணுவத்தின் ஆதரவோடு பதவிக்கு வந்த இம்ரான் கான் தற்போது இராணுவத்தின் ஆதரவையும் இழந்திருப்பதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானின் அடுத்த பிரதமர் பதவிக்கான போட்டியில் முன்னிலையில் இருப்பவரான ஷபாஸ் ஷரீப், கானின் வெளியேற்றம் புதிய ஆரம்பம் ஒன்றுக்கான வாய்ப்பாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

“புதிய விடியல் ஒன்று ஆரம்பமாகியுள்ளது. இந்தக் கூட்டணி பாகிஸ்தானை மீளக் கட்டியெழுப்பும்” என்று 70 வயதான ஷரீப் பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஷபாஸ் ஷரீப் பாகிஸ்தானில் மூன்று முறை பிரதமராக இருந்த நவாஸ் ஷரீபின் இளைய சகோதரராவார். பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு 2017 ஆம் ஆண்டில் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு முகம்கொடுத்த நவாஸ் ஷரீப் மருத்துவ சிகிச்சைக்காக விடுதலை பெற்ற நிலையில் தற்போது இங்கிலாந்தில் வாழ்ந்து வருகிறார்.

அரசியல் அனுபவம் பெற்ற அவர் முன்னர் பஞ்சாப் மாகாண முதலமைச்சராக பதவி வகித்துள்ளார்.

பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி தலைவரான ‌ஷபாஸ் ஷரீபை பிரதமராக தேர்ந்தெடுத்து எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால் அவர் புதிய பிரதமராக தேர்வு செய்யப்படுவது உறுதியாகியுள்ளது.

Mon, 04/11/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை