ஷங்காயில் கொவிட் தொற்று புதிய உச்சம்

சீனாவில் கொவிட்–19 வைரஸ் தொற்று சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

ஒமிக்ரோன் கொரோனா வைரஸ் திரிபினால் பாதிக்கப்பட்டுள்ள ஷங்காய் நகரில் அன்றாட வைரஸ் தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை புதிதாக 21,000க்கும் அதிகமான நோய்த்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ஈராண்டுகளுக்கு முன் வூஹானில் பதிவான தினசரி தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கையைவிட இது அதிகம் என்று கூறப்படுகிறது.

1.4 பில்லியன் மக்கள் வாழும் சீனாவில் சுமார் 90 வீதத்தினர் முதல் இரண்டு தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டுள்ளதால், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோருக்கு மிதமான அறிகுறிகள் மட்டுமே உள்ளன.

நேற்று ஷங்காயில் பதிவான நோய்த்தொற்றுச் சம்பவங்களில் பெரும்பாலானவை அறிகுறிகள் அற்றவை.

அந்நகரில் நடப்பில் இருக்கும் முடக்கநிலை எப்போது முடியும் என்பது தெரியவில்லை.

நகரத்திற்குள் நுழையும் சர்வதேச விமானங்களுக்குக் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்குவது குறித்து அதிகாரிகள் பரிசீலிப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.

அதிகரித்து வரும் பொதுமக்களின் விரக்தியைச் சமாளிக்க உணவு விநியோகத்தை மேம்படுத்துவதாகவும் அவர்கள் உறுதியளித்துள்ளனர்.

கொரோனா தொற்று சீனாவின் மத்திய நகரான வூஹானில் 2019 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் முதல் முறை கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Sun, 04/10/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை