தீவிரமடையும் ரஷ்ய தாக்குதல் குறித்து பொதுமக்களுக்கு உக்ரைன் எச்சரிக்கை

முக்கியமான உட்கட்டமைப்புகள் மீது ரஷ்யாவின் கண்மூடித்தனமான ஷெல் தாக்குதல் தொடரும் என்று பொதுமக்களை உக்ரைன் இராணுவம் எச்சரித்திருக்கும் நிலையில் ரஷ்யா இரசாயன தாக்குதல்களை நடத்த திட்டமிட்டு வருவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்து நான்கு வாரங்கள் கடந்திருந்தபோதும் அதனால் எந்த ஒரு பெரிய நகரையும் இன்னும் கைப்பற்ற முடியாமல் போயுள்ளது. ரஷ்யாவின் வான் தாக்குதல்கள், நீண்ட தூர ஏவுகணைகள் மற்றும் பீரங்கி தாக்குதல்களால் குடியிருப்பு பகுதிகளில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

தெற்கு துறைமுக நகரான மரியுபோல் ரஷ்ய தாக்குதல்களின் முக்கிய புள்ளியாக மாறியுள்ளது. அந்த நகரில் கட்டடங்கள் இடிந்து வீதிகளில் சடலங்கள் காணப்படுவதாகக் கூறப்படுகிறது. உக்ரைனின் இரண்டாவது மிகப்பெரிய நகரான கார்கிவிலும் தாக்குதல்கள் தீவிரம் அடைந்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அதிக திறன்படைத்த ஆயுதங்கள் மற்றும் அழிவை ஏற்படுத்தும் வெடி பொருட்களுடன் முக்கிய உட்கட்டமைப்புகள் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தொடரும் என்று எதிர்பார்க்க முடியும் என உக்ரைன் இராணுவம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் “உக்ரைன் வான் தளத்தில் ரஷ்யப்படைகளின் விமானங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக” உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது.

இதேவேளை உக்ரைன் மீது உயிரியல் மற்றும் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தித் தாக்குதல் நடத்துவது குறித்து ரஷ்ய ஜனாதிபதி புடின் பரிசீலித்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். எனினும் தனது குற்றச்சாட்டுக்கான ஆதாரங்கள் எதையும் பைடன் வெளியிடவில்லை.

உக்ரைன் தலைநகர் கியேவில் உயிரியல் மற்றும் இரசாயன ஆயுதங்கள் இருப்பதாக புடின் ஆதாரமின்றி குற்றஞ்சாட்டுவது உக்ரைன் மீது அவ்வாறான ஆயுதங்களை பிரயோகிப்பதற்கு முயற்சியாகவே கருத முடிகிறது எனவும் பைடன் குறிப்பிட்டார்.

இந்நிலையில் பைடனின் இந்தக் குற்றச்சாட்டு குறித்து வொஷிங்டனில் உள்ள ரஷ்ய தூதரகத்திடம் கேள்வி எழுப்பியபோதும் உடனடியாக பதிலளிக்கவில்லை என ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் சைபர் தாக்குதல் குறித்து வர்த்தகங்கள் உஷார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாகவும் பைடன் கூறியுள்ளார். “இதுவும் ரஷ்ய திட்டத்தில் ஓர் அங்கம்” என்று அவர் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த வாரம் ஐரோப்பாவுக்கு பயணமாகி இருக்கும் பைடன் ரஷ்யா மீதான தடைகள் பற்றி தனது கூட்டணி நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். ஏற்கனவே முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ரஷ்யாவுக்கு எதிராக தடைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ரஷ்யப் படைகளால் சுற்றி வளைக்கப்பட்டுள்ள மரியுபோலில், உக்ரைன் அப்படைகளை “தொடர்ந்து எதிர்த்துவருவதால்”, ரஷ்யப்படைகளின் இயக்கம் “நிறுத்தப்பட்டுள்ளதாக” பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உக்ரைனில் சண்டை நடைபெற்று வரும் பகுதிகளிலிருந்து மேலும் 8,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக உக்ரைன் கடந்த திங்கள்கிழமை தெரிவித்தது. அவர்களுள் சுமார் 3,000 பேர் மரியுபோல் நகரத்தைச் சேர்ந்தவர்கள் என, உக்ரைன் துணை பிரதமர் இரினா வெரேஷ்சுக் தெரிவித்தார்.

Wed, 03/23/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை