உக்ரைன்–ரஷ்யா இடையிலான பேச்சு ‘மோதல்களுடன்’ முன்னோக்கி நகர்வு

மரியுபோல் நகரில் அவலம் தொடர்கிறது

உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான பேச்சுவார்த்தை மோதல் போக்குடையதாக அமைந்தபோதும் முன்னோக்கி நகர்வதாக உக்ரைன் ஜனாதிபதி வெலோடிமிர் செலென்ஸ்கி நேற்று தெரிவித்தார். உக்ரைனில் மனிதாபிமான நெருக்கடி மோசமடைந்திருக்கும் சூழலில், ரஷ்யா மீது மேலும் தடைகளை விதிக்க மேற்கத்திய நாடுகள் திட்டமிட்டுள்ளன.

ரஷ்யாவின் கண்மூடித்தனமான வான் தாக்குதல்கள் முற்றுகையில் உள்ள மரியுபோல் நகரை “இறந்த சாம்பல் பூமியாக மாற்றியுள்ளது” என்று அந்த நகர சபை குறிப்பிட்டுள்ளது. அந்தத் துறைமுக நகரங்களின் வீதிகளில் மோதல்கள் மற்றும் குண்டு வெடிப்புகள் உக்கிரம் அடைந்துள்ளன.

உணவு, குடிநீர், மின்சாரம் இன்றி ஆயிரக்கணக்கான மக்கள் கட்டடங்களுக்குள் சிக்கிய நிலையில் இருப்பதாக நம்பப்படுகிறது. பொதுமக்கள் மற்றும் உக்ரைன் துருப்புகள் ரஷ்யாவின் தாக்குதல்களுக்கு இலக்காகி வருவதாக பிராந்திய ஆளுநர் பவ்லோ கிரிலெங்கோ குறிப்பிட்டுள்ளார்.

சுமார் 400,000 மக்கள் வசிக்கும் மரியுபோல் நகரின் பாதி அளவை ரஷ்ய படைகள் மற்றும் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாத பிரிவுகள் கைப்பற்றி இருப்பதாக ரஷ்யாவின் ஆர்.ஐ.ஏ செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

மரியுபோலைக் கைப்பற்றுவது ரஷ்யாவைப் பொறுத்தவரை பெரிய வெற்றியாக விளங்கும் என்று கருதப்படுகிறது.

மரியுபோல் கிரைமியத் தீபகற்பத்தில் உள்ள ரஷ்யத் துருப்பினர்களுடனும், டோன்பாஸ் வட்டாரத்திலுள்ள ரஷ்ய ஆதரவுக் கிளர்ச்சியாளர்களுடனும் இணைவதற்குத் தடங்கலாக உள்ளது.

நகரைக் கைப்பற்றினால், கிரைமிய தீபகற்பத்திற்கும் டோன்பாஸ் வட்டாரத்திற்கும் இடையே பாதை கிடைக்கும்.

இந்நிலையில் நேற்றுக் காலை உரையாற்றிய உக்ரைன் ஜனாதிபதி செலென்ஸ்கி, பேச்சுவார்த்தை பற்றிய நம்பிக்கையை வெளிப்படுத்தினார். கடந்த பெப்ரவரி 24 ஆம் திகதி ரஷ்யா படையெடுத்தது தொடக்கம் இந்த பேச்சுவார்த்தைகளில் சிறிய அளவே முன்னேற்றம் கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

“இது மிகவும் கடினமானது. சில நேரங்களில் மோதலுக்குரியது” என்றும் அவர் கூறினார். “ஆனால் படிபடியாக முன்னோக்கி செல்கிறது” என்றார்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் உக்ரைன் மீதான படையெடுப்பால் 3.5 மில்லியனுக்கும் அதிகமான உக்ரைனியர்கள் நாட்டை விட்டு வெளியேறி இருப்பதோடு உக்ரைனிய பொருளாதாரம் முன்னேப்போதும் இல்லாத தனிமைப்படுத்தலுக்கு முகம்கொடுத்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஐரோப்பாவுக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் நிலையில் மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது மேலும் தடைகளை விதிக்க திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

ரஷ்யா கடும் தாக்குதல்களை நடத்தியபோதும் உக்ரைன் தலைநகர் கியேவ் மற்றும் ஏனைய பிரதான நகரங்களை கைப்பற்ற முடியாமல் போயுள்ளது. சில நகர்புற பகுதிகள் பேரும் சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன.

கியேவை சுற்றி ரஷ்யப் படைகள் ஸ்தம்பித்திருப்பதாகவும் நாட்டின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் முன்னேற்றம் கண்டிருப்பதாகவும் மேற்கத்திய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். உக்ரைன் படைகள் சில பகுதிகளில் ரஷ்ய படையின் தாக்குதல்களை முறியடித்தபோதும் அவைகளை பின்வாங்கச் செய்ய முடியாதிருப்பதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

உக்ரைனில் ரஷ்யப் படையின் தற்போதைய ஆற்றல், அது படையெடுப்பைத் ஆரம்பித்தபோது இருந்த நிலையில் சுமார் 90 வீதத்தை விடவும் குறைந்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

ரஷ்யா அதன் தாக்குதல்களை 0ஆரம்பித்த பின்னர், அதன் படை பலத்தின் ஆற்றல் இந்த அளவுக்குக் குறைந்திருப்பது இதுவே முதல்முறை என அவர் குறிப்பிட்டார்.

அந்தத் தகவல் உண்மையாக இருந்தால், ரஷ்யா பெரிய அளவில் ஆயுதங்களை இழந்திருப்பதையும் அதன் தரப்பில் பல படையினர் பாதிக்கப்பட்டிருப்பதையும் அது குறிக்கும்.

படையெடுப்பு ஆரம்பித்தது தொடக்கம் 953 பொதுமக்கள் கொல்லப்பட்டு 1,557 பேர் காயமடைந்திருப்பதாக ஜெனீவாவில் ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது. பொதுமக்களை இலக்கு வைப்பதான குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்து வருகிறது.

மில்லியன் கணக்கானவர்கள் வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்திருக்கும் நிலையில் அவர்களுக்கான பராமரிப்பு, பாடசாலைகள் மற்றும் வேலைவாய்ப்புகளை வழங்குவதில் கிழக்கு ஐரோப்பா நெருக்கடியை சந்தித்துள்ளது.

Thu, 03/24/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை