நாடெங்கும் நோயாளர் பெரும் அசௌகரியத்தில்

தாதியர் மற்றும் துணை மருத்துவ சேவைக்கு உட்பட்ட 18 சுகாதாரத் துறை தொழிற்சங்கங்கள் நேற்றுக் காலை முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளன.  சம்பள முரண்பாடு உள்ளிட்ட பல்வேறு  கோரிக்கைகளை முன்வைத்து நேற்றுக் காலை 7 மணி முதல் மேற்படி வேலைநிறுத்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் அதனால் நாட்டின் பிரதான வைத்தியசாலைகள் உட்பட பல்வேறு வைத்தியசாலைகளிலும் நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

அது தொடர்பில் நேற்று கருத்து தெரிவித்துள்ள மேற்படி சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பினர் , புற்றுநோய் ஆஸ்பத்திரி, சிறுவர் வைத்தியசாலை, மகப்பேற்று வைத்தியசாலை, சிறுநீரக வைத்தியசாலை, மற்றும் அவசர சுகாதார சேவை பிரிவுகள் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு உட்படுத்தப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண,

கொரோனா வைரஸ் மரணங்களின் போது சடலங்களை விடுவித்தல் மற்றும் கடுமையான நோயாளிகளை வைத்தியசாலைகளுக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்தல் போன்ற அத்தியாவசிய கடமைகளை சுயாதீனமாக மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை நடைபெற்று வரும் நிலையில் பரீட்சை மண்டப சூழலில் கொரோனா வைரஸ் தொடர்பான சேவைகளை வழங்குவதற்கு தாம் சுயாதீனமான தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை மேற்படி தொழிற்சங்கங்கள் தமது கோரிக்கைகளை பலதடவைகள் முன்வைத்து பல தொழிற்சங்க போராட்டங்களையும் நடத்தியுள்ள நிலையில் நிலையிலேயே தற்போது தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய சூழ்நிலையை நாம் நன்கு அறிவோம். பெருமளவு கொரோனா வைரஸ் தொற்றுநோயாளிகள் தற்போது நாடெங்கிலும் இனங்காணப்பட்டு வருகின்றனர்.

அதற்கான சுகாதார சேவைகளை தடையில்லாமல் முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது சுகாதார அமைச்சு அதிகாரிகளே அவர்களே தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் விடயத்தில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.(ஸ)

 

-லோரன்ஸ் செல்வநாயகம்

Tue, 02/08/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை