வைரஸ் தொற்றின் நிரந்தரத் தீர்வுக்கு தடுப்பூசியே ஒரே வழி

தடுப்பூசிகளின் வருகையே காலத்திற்குக் காலம் எம்மைத் தொற்று நோய்களிலிருந்து காப்பாற்றிக் கொண்டு வருகின்றது. தடுப்பூசி தான் தொற்றின் நிரந்தரத் தீர்வுக்கு ஒரே வழி என மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கு.சுகுணன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்து கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அனர்த்தங்களும் அழிவுகளும் பல நூற்றாண்டு காலமாகப் பூமியில் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. இந்த கோவிட் வைரஸ் செயற்கையாகப் பரவியது என்று பல கருத்து வெளியிட்டிருக்கின்றார்கள். ஆனால் வைரஸ் என்பது இயற்கையாகப் பல தடவைகள் எமது சந்ததியரின் காலங்களிலும் வந்திருக்கின்றது.

ஒவ்வொரு நூற்றாண்டுகளிலும் பல சம்பவங்கள் உலகளாவிய தொற்றுக்களாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

6ம் நூற்றாண்டில் கறுப்புக் காய்ச்சல் மூலம் கோடிக்கணக்கானவர்கள் இறந்துள்ளார்கள்.

அதேபோன்றொரு சம்பவம் 13ம் நூற்றாண்டில் பிளேக் வைரஸ் மூலம் தொற்று உருவாகி அதிலும் பலர் இறந்திருக்கின்றார்கள். உலகத்தின சனத்தொகையை அரைவாசியாக ஆக்கியிருக்கின்றது. அந்த கிருமிகளின் தொற்று. எச்.ஐ.வி, கோவிட் போன்ற பல தொற்று நோய்கள் உலகின் சனத்தொகையைக் காலத்திற்குக் காலம் குறைத்து வந்திருக்கின்றது.

அது இயற்கையின் நியதியாக இயங்கிக் கொண்டிருக்கின்றது. அந்த அடிப்படையில் தன் கோவிட் வைரசின் ஒரு திரிபான கோவிட் 19 ஆக உருவெடுத்துள்ளது.

இந்தக் கோவிட்- 19இனால் இந்த இரண்டு ஆண்டுகளுக்குள் இன்று வரை உலகத்தில் சுமார் 35 கோடி பேர் பாதிக்கப்பட்டும் 56 லட்சம் பேர் இறந்தும் இருக்கின்றார்கள்.

எமது நாட்டிலும் சுமார் ஆறு இலட்சம் பேர் பாதிக்கப்பட்டும் பதினாறாயிரம் பேர்வரை இறந்தும் இருக்கின்றார்கள். இன்று பிளேக், கொளொரா, போலியோ, மஞ்சள் காய்ச்சல், பெரிய அம்மை போன்ற நோய்கள் உலகத்தில் இல்லை. இவற்றுக்கெல்லாம் பிரதானமாக அமைந்தது தடுப்பூசிகள்.

இந்தத் தடுப்பூசிகளின் வருகையே காலத்திற்குக் காலம் எம்மைத் தொற்று நோய்களிலிருந்து காப்பாற்றிக் கொண்டு வருகின்றது. தடுப்பூசிகள் புதிதாக உருவாகிய விடயங்கள் அல்ல.

அந்த வகையில் இன்று இருக்கின்ற தொற்று நிலைமைகளை நாங்கள் சில நடைமுறைகள் மூலம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகின்றோம் என்றார்.

Wed, 02/02/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை