சிரேஷ்ட அறிவிப்பாளர் ஸனூஸ் மொஹமட் பெரோஸ் காலமானார்

இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை முன்னாள் பொறுப்பாளரும் தமிழ் சேவையின் முன்னாள் கட்டுப்பாட்டாளருமான சிரேஷ்ட அறிவிப்பாளர் ஸனூஸ் மொஹம்மட் பெரோஸ் (வயது 60) நேற்று முன்தினம் (03) காலமானார்.

பேருவளை மருதானையை பிறப்பிடமாகக்கொண்ட இவர் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் தமிழ் சேவை பகுதி நேர அறிவிப்பாளராக இணைந்து தமிழ் சேவையில் பதவியுயர்வு பெற்று கட்டுப்பாட்டாளர் பதவியையும் வகித்தார்.

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன செய்தி அறிவிப்பாளராகவும் சிறிது காலம் பணியாற்றியதோடு சிறந்த செய்தி அறிவிப்பாளருக்கான ஜனாதிபதி விருதை இரு முறை வென்று தான்சார்ந்த சமூகத்திற்கு பெருமை சேர்த்தது மாத்திரமன்றி தமிழ் அறிவிப்பு திறமையினால் பேருவளை மண்ணுக்கு பெருமையும் சேர்த்தார்.

சீனன்கோட்டை அல் ஹுமைஸரா தேசிய பாடசாலையின் பழைய மாணவரான பெரோஸ் மும்மொழிகளிலும் தேர்ச்சி பெற்ற நாடறிந்த சிரேஷ்ட அறிவிப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிறிது காலம் நோய்வாய்பட்டிருந்த அன்னாரின் திடீர் மறைவு செய்தி கேட்டு ஊடகத்துறை சார்ந்தோர், பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், கலைஞர்கள் உட்பட பல துறைகளைச்சார்ந்தோர், பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள் அன்னாரின் வீட்டுக்கு வருகை தந்திருந்தனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம், பாராளுமன்ற உறுப்பினர்களான இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், மர்ஜான் பளீல் மற்றும் பேருவளை நகர பிதா மஸாஹிம் மொஹமட் , முன்னாள் எம்.பி அஸ்லம் ஆகியோர் அன்னாரின் வீட்டுக்கு வருகை தந்து தமது அனுதாபங்களையும் தெரிவித்துக்கொண்டனர்.

மர்ஹூம்களான ஸனூஸி, ஹுஸைமா தம்பதிகளின் புதல்வரும் நான்கு பிள்ளைகளின் தந்தையுமான ஸனூஸ் மொஹமட் பெரோஸின் ஜனாஸா நேற்று இரவு பேருவளை, மருதானை மஸ்ஜிதுல் அப்ரார் ஜும்ஆ பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

 

அஜ்வாத் பாஸி

Sat, 02/05/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை