ஊழியர் சேமலாப நிதியிலிருந்து 25 வீத வரி அறவிடுதல்

பாராளுமன்றில் நேற்றும் சர்ச்சை

ஊழியர் சேமலாப நிதிய வருமானத்திலிருந்து வரி செலுத்துமாறு இறைவரித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தினால் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளை தாம் நிராகரிப்பதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஊழியர் சேமலாப நிதியத்திற்கு கிடைக்கும் இலாபத்தில் நூற்றுக்கு 25 வீதத்தை வரியாக அறவிடுவது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்,

ஊழியர் சேமலாப நிதியத்தின் வருமானத்தில் நூற்றுக்கு 25 வீத வரியை அறவிட்டு தொழிலாளர்களின் பணத்தை அரசாங்கம் பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றது.

ஊழியர் சேமலாப நிதியத்தில் 03 ட்ரில்லியன் ரூபா நிதி காணப்படுகிறது. அதன் மூலம் கிடைக்கும் 250 பில்லியன் ரூபா வருமானத்தில் 65 பில்லியனை அபகரித்துக்கொள்வதற்கே அரசாங்கம் முயற்சிக்கின்றது. இது தொடர்பில் தொழிலமைச்சின் நிலைப்பாடென்ன என எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா:

இந்த விடயத்தில் எனது நிலைப்பாடென்ன என்பதனை நான் தெரிவித்துள்ளேன். இது இந்த வர்த்தமானியில் மட்டுமல்ல, வரவு செலவுத் திட்டத்தை தயாரிக்க முன்னர் வருமான வரி திணைக்களம் வியாக்கியானம் ஒன்றை தெரிவித்துள்ளது.

ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் நிதி ஊடான முதலீடுகளில் கிடைக்கும் வருமானம் சட்டப்படியான வருமானமாக பார்க்கப்படுவதால் அதற்கு வரியை செலுத்த வேண்டும் என்று வருமான வரி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தொழில் அமைச்சுக்கு தெரிவித்திருந்தார்.

வருமான வரி திணைக்களப் பணிப்பாளர் நாயகத்தின் வியாக்கியானம் தவறென பல மாதங்களுக்கு முன்னர் கொள்கையளவில் நாம் நிராகரித்து திறைச்சேரிக்கும் அறிவித்துள்ளோம்.

அதற்கிணங்க அது சரியா? தவறா? என்ற விளக்கத்தை அவர்கள் வழங்கவுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

இதன்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிடுகையில், ஊழியர் சேமலாப நிதியத்திலிருந்து வரி அறவிடுவதை தொழிலமைச்சு நிராகரித்துள்ள நிலையில் அதனை அறவிட நிதி அமைச்சரால் வெளியிடப்பட்டிருக்கும் வர்த்தமானி அறிவிப்பை ஏற்றுக்கொள்கிறீர்களா? தொழில் அமைச்சு நிராகரிப்பதை எவ்வாறு நிதி அமைச்சர் தான்தோன்றித்தனமாக வரத்தமானி அறிவிப்பாக வெளியிட முடியும்? என கேள்வி எழுப்பினார்.

அது தொடர்பில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிடுகையில், இறைவரி திணைக்கள பணிப்பாளரினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நாம் நிராகரித்தோம். ஆனால் தற்போது வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவிப்பு சரியா? பிழையா? என்பது தொடர்பில் விவாதித்து தீர்மானிக்கவேண்டும் என்றார்.

அதன்போது முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்:

ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகிய இரண்டு நிதியங்களையும் வருமான வரி திணைக்களத்திலிருந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். அதுதொடர்பில் கட்சித்தலைவர்களுடன் கலந்துரையாடி சட்டமூலம் சமர்ப்பிக்க முடியும் என்றார்.

அதனைத்தொடர்ந்து குறுக்கிட்ட எதிர்க்கட்சியின் பிரதம கொரடா லக்ஷ்மன் கிரியெல்ல, வர்த்தமானி அறிவிப்பின் பிரகாரம் இந்த நிதியத்திலிருந்து இரண்டு தடவைகள் வரி அறிவிடப்படுகின்றன. இது சட்டத்துக்கு முரணானது. எனினும் இது தொடர்பில் பாராளுமன்ற விவாதம் ஒன்றை பெற்றுத் தருமாறு கோருகின்றோம் என்றும் அவர் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்

Thu, 02/10/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை