கடந்த 30 நாட்களில் கிழக்கில் 2,736 கொவிட்-19 தொற்றாளர்கள் பதிவு

கடந்த 30 நாட்களில் கிழக்கில் 2,736 கொவிட்-19 தொற்றாளர்கள் பதிவு-2736 COVID19 Cases Reported From Eastern Province in Last 30 Days

- பல்வேறு பிரதேசங்கள் அவதானத்திற்குரிய பகுதிகளாக அடையாளம்
- சுகாதார வழிகாட்டல்களை இறுக்கமாக பின்பற்றவும்

கிழக்கு மாகாணத்தில் கடந்த 30 நாட்களில் 02 ஆயிரத்தி 736 பேர் கொவிட்-19 தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.ஆர்.எம். தௌபீக் தெரிவித்தார்.

மட்டக்களப்பு சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 1213 பேரும், அம்பாறை சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 952 பேரும், கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 559 பேரும், திருகோணமலை சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 12 பேருமாக 2736 பேருக்கு கொரோனாத் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

உஹண, அம்பாறை, மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி, செங்கலடி, தெஹியத்தக்கண்டி, ஏறாவூர் ஆகிய வைத்தியதிகாரி பிரிவுகள் ஜனவரி மாதம் மிக அவதானத்திற்குரிய வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அம்பாறை சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 13 பேரும், மட்டக்களப்பு சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 07 பேரும், கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 07 பேருமாக 27 பேர் மரணமடைந்துள்ளதாக தெரிவித்தார்.

பொது மக்கள் அவசியமற்ற ஒன்று கூடல்களை தவிர்த்துக் கொள்ளமாறும், திருமண வைபவங்கள், சமய வைபவங்கள், ஆராதனைகள் மற்றும் மரணச் சடங்குகளின் போது சுகாதார வழிமுறைகளை சரியாகப் பின்பற்றுமாறு, பொது வைபவங்களுக்கு சுகாதார அதிகாரிகளின் அனுமதியை பெறவேண்டுமெனவும் அறிவித்துள்ளார்.

பொது மக்கள் முகக்கவசம் அணியாமலும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாமலும் தமது அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபடுவதை அவதானிக்க முடிகின்றது. இதனால் கொவிட்-19 மேலும் அதிகரிக்கக் கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது.

எனவே, பொது மக்கள் தொடர்ந்தும் இறுக்கமான சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்குமாறும், இதனை மீறுபவர்களுக்கெதிராக தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவித்தார்.

இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் கொவிட்-19 03வது பூஸ்டர் தடுப்பூசி ஏற்றப்பட்டு வருவதாகவும் இதுவரை பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக் கொள்ளாதவர்கள் சுகாதார வைத்தியதிகாரி அலுவலகங்களுடன் தொடர்பு கொண்டு தங்களுக்கான தடுப்பூசியினை பெற்றுக் கொள்ளுமாறும் கேட்டுள்ளார்.

கிழக்கு மாகாணத்திலுள்ள சகல பாடசாலைளிலும் 12 தொடக்கம் 15 வயது வரையிலான பாடசாலை மாணவர்களுக்கு சுகாதார வைத்தியதிகாரி பிரிவுகள் தோறும் பைஸசர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு  வருவதாகவும் தெரிவித்தார்.

(ஒலுவில் விசேட நிருபர்)

Sun, 01/30/2022 - 10:32


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை