இராதாகிருஷ்ணன் MP க்கு நேரம் வழங்கிய அரச தரப்பு

எதிரணி நேரம் வழங்காது புறக்கணிப்பு

எதிர்த்தரப்பு பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வி.இராதாகிருஷ்ணன் உரையாற்ற எதிரணி போதிய நேரம் ஒதுக்காததால் ஆளும் தரப்பினால் அவருக்கு மேலதிக நேரம் ஒதுக்கப்பட்டது.

நிதி அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றிய இராதாகிருஷ்ணன் எம்.பி, தனக்கு மேலதிக நேரம் ஒதுக்குமாறு எதிர்த்தரப்பு பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்லவிடம் கோரினார். அவர் அதற்கு எந்த பதிலும் வழங்காததால் ஆளும் தரப்பு பிரதம கொறடா அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ அவருக்கு மேலதிகமாக 03 நிமிடங்கள் வழங்கினார். பாராளுமன்றத்தில் நேற்று நிதி அமைச்சு மீதான விவாதம் நடைபெற்றது. பகல்போசண இடைவேளையின் பின்னர் வி.இராதாகிருஷ்ணன் எம்.பி உரையாற்றினார்.

அவருக்கு 04 நிமிடங்களே ஒதுக்கப்பட்டிருந்தது. அவர் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது அவருக்கு 2 நிமிடங்கள் மாத்திரமே இருப்பதாக சபைக்கு தலைமை தாங்கிய குழுக்களின் பிரதித்தலைவர் அங்கஜன் இராமநாதன் எம்.பி அறிவித்தார்.

எனினும் தனக்கு மேலதிகமாக 02 நிமிடங்கள் வழங்குமாறு எதிர்த்தரப்பு பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்லவிடம் அவர் கோரினார். ஆனால் லக்ஷ்மன் கிரயெல்ல மௌனம் சாதித்ததையடுத்து '' நாம் பேசுவதில் பயனில்லை. ஆளும் தரப்பிலாவது எமக்கு நேரம் ஒதுக்க வேண்டும்.

இல்லாவிட்டால் பேசுவதால் எந்தப் பயனும் இல்லயென்று குறிப்பிட்ட இராதாகிருஷ்ணன் எம்.பி பேச்சை ஆரம்பித்தது மாத்திரமே, நேரம் முடிந்தது என்றார்.

இதன் போது ஆளும் தரப்பு பிரதம கொறடா அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ குறுக்கீடு செய்து,

"அவர் எங்கள் பழைய நண்பர். எதிர்த்தரப்பில் அவருக்கு நேரம் வழங்காவிட்டால், எமது தரப்பால் 03 நிமிடங்கள் வழங்குகிறோம். இப்படித்தான் நாம் கவனிக்கிறோம்" என்றார்.

இதன்படி அவருக்கு மேலதிகமாக 3 நிமிடங்கள் வழங்கப்பட்டன. இதற்கு நன்றி தெரிவித்த இராதாகிருஷ்ணன் எம்.பி தொடர்ந்து உரையாற்றினார்.

லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்

Sat, 12/11/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை