இஸ்ரேலிய வான் தாக்குதலால் சிரியாவில் பாரிய பொருட்சேதம்

சிரியாவின் லடக்கியா துறை முகத்தின் மீது இந்த மாதத்தில் இரண்டாவது முறையாக இஸ்ரேல் நேற்று செவ்வாய்க்கிழமை நடத்திய வான் தாக்குதலில் பாரிய பொருட்சேதம் ஏற்பட்டிருப்பதாக சிரிய அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

“லடக்கியா துறைமுகத்தில் உள்ள கொள்கலன் நிலையை இலக்கு வைத்து மத்தியதரைக்கடல் பக்கம் இருந்து அதிகாலை 3.21 மணி அளவில் இஸ்ரேலிய எதிரிகள் பல ஏவுகணைகளை வீசி தாக்கியுள்ளனர்” என்று சிரிய இராணுவத்தை மேற்கோள்காட்டி சானா செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

அரச தொலைக்காட்சி ஒளிபரப்பிய நேரடி காட்சிகளில் கொள்கலன் முனையத்தில் இருந்து பாரிய தீ மற்றும் புகை வெளிவருவது தெரிகிறது. இந்த தீயை அவசர சேவை பிரிவினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாக அரச ஊடகம் பின்னர் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டது.

இந்த ஏவுணை தாக்குதலால் மருத்துவமனை ஒன்று, சில குடியிருப்பு கட்டடங்கள் மற்றும் கடைகளும் சேதமடைந்திருப்பதாக சானா குறிப்பிட்டது.

இந்த சம்பவம் பற்றி இஸ்ரேலிய இராணுவ பேச்சாளரிடம் கேட்டபோது, “வெளிநாட்டு ஊடக செய்திகளுக்கு கருத்துக் கூற முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.

லடக்கியா சிரியாவின் பிரதான வர்த்தகத் துறைமுகமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிரியாவில் உள்நாட்டுப் போர் வெடித்தது தொடக்கம் அந்நாட்டின் மீது இஸ்ரேல் அடிக்கடி தாக்குதல்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. சிரிய துருப்புகள் மற்றும் அதன் கூட்டாளி நாடான ஈரான் ஆதரவு போராளிகள் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பை இலக்கு வைத்தே பெரும்பாலான தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன.

Wed, 12/29/2021 - 07:14


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை