நாடு முழுவதும் நேற்று ஆறு மணி நேரமாக மின்துண்டிப்பு

சி.ஐ.டி விசாரணைக்கு அமைச்சர் ஜோன்ஸ்டன் கோரிக்கை

பாராளுமன்ற மின்தூக்கிக்குள் சிக்கிய 02 எம்.பிக்கள் பாதுகாப்பாக மீட்பு

மின்சார தொழிற்சங்க நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தம்

நாடு முழுவதும் ஏற்பட்ட மின்துண்டிப்பு தொடர்பில் சி.ஐ.டி விசாரணை நடத்த வேண்டுமென ஆளும் தரப்பு பிரதம கொறடா அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

மின்துண்டிப்பினால் பாராளுமன்ற அமர்வுக்கும் பாதிப்பு ஏற்பட்டது. பாராளுமன்றத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.பாதுகாப்பு அமைச்சின் விவாதம் நடைபெறும் நிலையில் இந்த மின் துண்டிப்பு நடந்தது.

பாராளுமன்றத்திற்கு தனியான மின்சார இணைப்பு வழங்கப்பட வேண்டும். மின்துண்டிப்பு நிலையில் சபை நடவடிக்கைகளை முன்கூட்டி நிறைவு செய்ய எதிரணியும் உடன் பட்டது என்றார்.

நாசகார வேலையினாலா இந்த துண்டிப்பு இடம்பெற்றதென எதிரணி எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ மின்துண்டிப்பு தொடர்பில் ஆராயப்படுவதாக தெரிவித்தார்.

நாடு முழுவதும் நேற்று ஏற்பட்ட சுமார் 06 மணி நேர திடீர் மின்சாரத் தடை காரணமாக பாராளுமன்ற செயற்பாடுகளும் தடைப்பட்டதோடு இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கன் (லிப்டுக்குள்) மின்தூக்கிக்குள் சிக்கியதோடு அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

பிரதான மின்விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே நாடு முழுவதும் நேற்று மின்சாரத் தடை ஏற்பட்டது.

ஜெனரேட்டர்கள் பயன்படுத்தப்பட்டு பாராளுமன்ற அமர்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டன.

பிற்பகல் 3.10 மணியளவில் ஜெனரேட்டர் செயற்பாடுகளும் தடைப்பட்டன. இதனால் பாரளுமன்றம் முழுவதும் மின் இணைப்பு தடைப்பட்டது.

இதனால் சபை அமர்வுகள் தவிர்ந்த அனைத்து செயற்பாடுகளும் தடைப்பட்டன. ஆனால் வரவு செலவுத்திட்ட விவாதம் மாத்திரம் மின்தடைக்கு மத்தியிலும் தொடர்ந்து நடைபெற்றது இதற்காக விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

பாராளுமன்ற அமர்வுகளை முன்கூட்டி நிறைவு செய்வது தொடர்பாக ஆராயப்பட்ட போதும் தொடர்ந்து அமர்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

நாட்டில் தடைப்பட்டிருந்த மின் விநியோக நடவடிக்கைகள் 6 மணித்தியாலங்களின் பின்னர் வழமைக்கு திரும்பியுள்ளதாக மின்சாரசபை தெரிவித்தது. இந்த நிலையில், அநுராதபுரம், ஹபரன, லக்ஸபான, அதுறுகிரிய, கொத்மலை, கட்டுநாயக்க மற்றும் பியகம ஆகிய பிரதான மின்விநியோக மார்க்கங்களின் நடவடிக்கைகள் இவ்வாறு வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் ஏற்பட்ட மின் விநியோகத்தடையானது மின் பொறியியலாளர் சங்கத்தின் திட்டமிடப்பட்ட சதியாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.மின்சார மீள் இணைப்பு பணிகளை மின் பொறியியலாளர் சங்கம் திட்டமிட்டே இழுத்தடிப்பு செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, மின் பொறியலாளர் சங்கம் மேற்கொண்டு வந்த சட்டப்படி கடமையாற்றும் தொழிற்சங்க நடவடிக்கை தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக அதன் தலைவர் செளம்ய குமாரவடு தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்

Sat, 12/04/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை