கொல்லப்பட்ட பிரியந்த குமாரவின் குடும்பத்திற்கு ரூ. 25 இலட்சம் நிதியுதவி

கொல்லப்பட்ட பிரியந்த குமாரவின் குடும்பத்திற்கு ரூ. 25 இலட்சம் நிதியுதவி-Rs 25 Lakhs for Priyantha Kumara Cabinet Decisions

- இவ்வார அமைச்சரவை கூட்டத்தில் 6 முடிவுகள்

பாகிஸ்தானின் சியால்கோட்டில் கொல்லப்பட்ட பிரியந்த குமாரவின் குடும்பத்திற்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக ஊழியர் நலன்புரி நிதியிலிருந்து ரூ. 2.5 மில்லியனை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நேற்று (06) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அமைச்சரவை முடிவுகள் உள்ளிட்ட ஏனைய அமைச்சரவை முடிவுகள் வருமாறு,

பாகிஸ்தான் சியல்கோட் பிரதேசத்தின் தொழிற்சாலையொன்றில் முகாமையாளராக பணிபுரிந்து வந்த பிரியந்த குமார தியவடன கடந்த 2021 திசம்பர் மாதம் 03 ஆம் திகதி கொலைகாரக் கும்பலால் மனிதநேயமற்ற வகையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

புலம்பெயர் பணியாளராக 11 வருடங்களுக்கு மேலாக அவர் இலங்கைப் பொருளாதாரத்திற்கு வழங்கிய ஒத்துழைப்பைக் கருத்தில் கொண்டு, அவருடைய இழப்பால் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள மனைவி மற்றும் பிள்ளைகளின் நலன் கருதி மனிதநேய அடிப்படையில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக ஊழியர் நலனோம்புகை நிதியத்தின் மூலம் 2.5 மில்லியன்களை வழங்குவதற்காக தொழில் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

2. இலங்கை அடையாள இலக்கத்துடன் கூடிய பிறப்புச் சான்றிதழ் வழங்கல்
இலங்கையில் பிறக்கும் எந்தவொரு பிள்ளையும் பிறப்பின் போது பதிவு செய்து அப்பிள்ளைக்கு தேசிய பிறப்புச் சான்றிதழை வழங்கும் அதிகாரம் பிறப்பு மற்றும் இறப்பைப் பதிவு செய்யும் சட்டத்திற்கமைய பதிவாளர் நாயக திணைக்களத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

1968 ஆம் ஆண்டு 32 ஆம் இலக்க ஆட்களைப் பதிவு செய்யும் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய தேசிய ஆட்கள் பெயர்ப்பட்டியலை பேணுதல் மற்றும் 15 வயதை அடைந்தவர்கள் மற்றும் அடையவுள்ள இலங்கைப் பிரஜைகளின் விண்ணப்பத்திற்கமைய அவர்களைப் பதிவு செய்து தேசிய அடையாள அட்டையை வழங்குதல்,  ஆட்பதிவுத் திணைக்களத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதேபோல், 2006 ஆம் ஆண்டு 19 ஆம் இலக்க இலத்திரனியல் கொடுக்கல் வாங்கல் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய வெளியிடப்பட்டுள்ள 2019 ஆம் ஆண்டு 01 ஆம் இலக்க இலத்திரனியல் கொடுக்கல் வாங்கல் (இலங்கை அடையாள இலக்க) கட்டளையின் பிரகாரம் அனைத்து இலங்கைப் பிரஜைகளுக்கும் இலங்கை அடையாள இலக்கத்தை வழங்குவதற்காகவும் ஆட்பதிவுத் திணைக்களத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஒரே அடையாள இலக்கத்தைப் பயன்படுத்துவதன் மூலம் பிறப்பிலிருந்து இறப்பு வரைக்கும் மேற்கொள்ளும் செயற்பாடுகளின் போது குறித்த நடவடிக்கைகளை இலகுவாகவும் வினைத்திறனாகவும் மேற்கொள்வதற்கு இலங்கையர்களுக்கு வருங்காலங்களில் வாய்ப்புக் கிடைக்கும். அதற்கமைய, ஆட்பதிவுத் திணைக்களத்தின் தகவல் தொகுதி மூலம் இணையவழியூடான இலங்கை அடையாள இலக்கத்தை பதிவாளர் நாயகத் திணைக்களத்திற்கு வெளியிடுவதற்கும், குறித்த இலக்கத்தை உள்ளடக்கி பதிவாளர் நாயகத் திணைக்களத்தின் மூலம் குறித்த நபர்களின் பிறப்புச் சான்றிதழை வழங்குவதற்கும், பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

3. ஜெனரல் ஸ்ரீமத் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு பொதுநலவாய அமைப்பு நாடுகளின் பல்கலைக்கழக சங்கத்தால் ஆய்வுக்கான ஒதுக்கீட்டு வழங்கல்
50 இற்கு மேற்பட்ட பொதுநலவாய அமைப்பு நாடுகளில் 500 இற்கும் அதிகமான அங்கத்துவ நிறுவனங்களுடன் கூடியதாக, பொதுநலவாய அமைப்பு நாடுகளின் பல்கலைக்கழக சங்கம் தாபிக்கப்பட்டுள்ளது. அது 1913 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பொதுநலவாய அமைப்புக்கு சொந்தமானதும் அதற்கு வெளியேயும் வசிக்கின்ற நபர்கள் மற்றும் சமூகங்களின் ஆரோக்கியத்திற்காக உயர்கல்வித் தேர்ச்சியை மேம்படுத்தல் மற்றும் ஒத்துழைப்பு வழங்கல் இச்சங்கத்தின் பணிக்கூற்றாக அடையாளங் காணப்பட்டுள்ளது.
“ஜெனரல் ஸ்ரீமத் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சமூகத்தவர்களிடையே பால்நிலை தொடர்பாகத் தெளிவூட்டல்” எனும் தலைப்பில் குறித்த பல்கலைக்கழகத்தால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கருத்திட்ட யோசனையை கருத்தில் கொண்டு குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 1000 பிரித்தானிய பவுண்கள் ஆய்வுக்காக ஒதுக்கி வழங்குவதற்கு பொதுநலவாய அமைப்பு நாடுகளின் பல்கலைக்கழக சங்கம் உடன்பாடு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, குறித்த ஒதுக்கீட்டு வழங்கலை பொதுநலவாய அமைப்பு நாடுகளின் பல்கலைக்கழக சங்கத்திடமிருந்து பெற்றுக்கொள்வதற்காக பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

4. தேசிய போசாக்கு மற்றும் உணவுப் பாதுகாப்பு மற்றும் ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட வணிக விவசாயக் கருத்திட்டங்களுக்காக மகாவலி அதிகார எல்லைக்குட்பட்ட காணிகளை நீண்டகாலக் குத்தகை அடிப்படையில் முதலீட்டாளர்களுக்கு வழங்கல்
கொவிட் 19 தொற்று நிலைமையில் உணவு இறக்குமதிக்காக அந்நிய செலாவணி வெளிநாடுகளுக்கு இழுத்துச் செல்லப்படுவதால் எமது நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்படும் எதிர்மறை விளைவுகளைக் குறைக்கும் நோக்கில் உள்ளூரில் பயிரிடக்கூடிய அத்தியாவசிய உணவுப்பயிர்களைப் பயிரிடுவதற்கு முதலீட்டாளர்களை ஊக்குவிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதேபோல், உள்ளூர் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கும், கால்நடைத் தீவனங்களை உள்ளூரில் உற்பத்தி செய்யும் தேசிய உணவு உற்பத்தி ஊக்குவிப்பு, கொள்கைப் பிரகடனத்தின் நோக்கமாக உள்ளது. அதற்கமைய, தேசிய போசாக்கு மற்றும் உணவுப் பாதுகாப்பு மற்றும் ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட வணிக விவசாயக் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக மகாவலிப் பிரதேசங்களில் அமைந்துள்ள 1,750 ஹெக்டயர் காணிகளை முறையான பொறிமுறையைக் கையாண்டு தெரிவு செய்யப்பட்ட முதலீட்டாளர்களுக்கு நீண்டகாலக் குத்தகையின் அடிப்படையில் வழங்குவதற்காக நீர்ப்பாசன அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

5. குற்ற நீதிச் செயன்முறையில் தடயவியல் போதைப்பொருள் பகுப்பாய்வு தொடர்பான இயலளவு விருத்திக் கருத்திட்டம்
இலங்கை குற்ற நீதிச் செயன்முறையில் தடயவியல் போதைப்பொருள் பகுப்பாய்வு தொடர்பான இயலளவு விருத்திக் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக கொரியா சர்வதேச ஒத்துழைப்புப் பிரதிநிதி (KOICA) நிறுவனம், 4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்குவதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கருத்திட்டத்தின் கீழ் போதைப்பொருள் மற்றும் நீதிமன்ற போதைப்பொருள் விஞ்ஞான இரசாயன ஆய்வுகூடத்தின் ஆராய்ச்சி உபகரணங்களை மேம்படுத்தல், போதைப்பொருள் மற்றும் நீதிமன்ற போதைப்பொருள் விஞ்ஞானம் தொடர்பான பயிற்சி வழங்கல் மற்றும் ஆய்வுகூடத் தகவல் முகாமைத்துவத் தொகுதியை நிறுவுதல் போன்ற பணிகளை மேற்கொள்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

குறித்த ஒதுக்கீட்டு வழங்கலைப் பெற்றுக்கொள்வதற்காக கொரியா சர்வதேச ஒத்துழைப்புப் பிரதிநிதி நிறுவனம், வெளிநாட்டு வளங்கள் திணைக்களம், அரச இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களம் மற்றும் நீதி அமைச்சுக்கும் இடையில் ஆய்வு வரையறைகள் (வுநசஅள ழக சுநகநசநnஉந) உள்ளடங்கும் “கலந்துரையாடல் அறிக்கையில்” கையொப்பமிடுவதற்காக நீதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

6. அம்பாறை மாவட்ட பொது மருத்துவமனையின் இதயநோய் பிரிவை நிறுவுதல்
அம்பாறை மாவட்டத்தில் இதயநோய்களுக்கு ஆளாகுபவர்கள் மற்றும் இதயநோயால் இறக்கின்றவர்களின் எண்ணிக்கை கடந்த வருடம் படிப்படியாக அதிகரித்துள்ளது.

இந்நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக, சிகிச்சை பெறுவதற்கு சமூகமளிக்கும் இதய நோயாளர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் சத்திரசிகிச்சை சேவைகளை வழங்குவதற்காக அம்பாறை பொது மருத்துவமனையின் பௌதீக வளங்களை அபிவிருத்தி செய்வதற்கான தேவை காணப்படுகின்றது. அதற்கமைய, அம்பாறை பொது மருத்துவமனையின் நீர்மமேற்று ஆய்வுகூடத்துடன் (Catheter Laboratory) கூடிய இதயநோய் பிரிவொன்றை அமைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

குறித்த கருத்திட்டத்தை தயாரித்து, நிர்மாணித்து, ஒப்படைத்தல் எனும் அடிப்படையில் பொறியியல் பணிகள் தொடர்பான மத்திய ஆலோசனைப் பணியகத்திற்கு வழங்குவதற்காக சுகாதார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

Tue, 12/07/2021 - 11:32


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை