கொவிட்டை கட்டுப்படுத்த இதுவரை 181 பில். ரூபா செலவு

கடந்த ஒன்றரை வருடத்தில் மட்டும் – கெஹலிய

வரவு செலவு ஒதுக்கீட்டுக்கு மேலதிகமாக கொவிட்டை கட்டுப்படுத்த கடந்த ஒன்றரை வருடகாலமாக சுகாதார அமைச்சு 181 பில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். சிரமமான வேளையில் இவ்வாறு அரசாங்கம் பெருமளவு நிதியை இதற்காக ஒதுக்கியது மிகவும் ஆக்கபூர்வமான நடவடிக்கை என சுகாதார அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனை சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் கீழ் கிராமிய வீதி அபிவிருத்தி திட்டத்தினூடாக குண்டசாலை தேர்தல் பிரிவில் 3 வீதிகளுக்கு காபட் இடும் பணியை கடந்த 17ஆம் திகதி ஆரம்பித்து வைத்த வேளையியிலேயே அவர் தெரிவித்தார். தற்போது பூஸ்டர் தடுப்பூசி வழங்கி, தடுப்பூசி வழங்குவதில் உலகில் நான்காவது இடத்தை இலங்கை அடைந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார் .

அதேபோன்று பூஸ்டர் தடுப்பூசி வழங்குவதற்காக 145 லட்சம் தடுப்பூசிகள் தேவை எனவும், அவற்றில் பெரும் தொகை தற்போது நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் தடுப்பூசி அனைத்தையும் கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் விஷேடமாக எதிர்வரும் சில மாதங்களில் பூஸ்டர் தடுப்பூசியை அதிகமாக மக்களுக்கு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கொவிட் தொற்றின் போது இலங்கையில் செயல்படுத்தப்பட்ட கொவிட் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை வீட்டிலேயே தங்க வைத்து சிகிச்சை அளிக்கும் முறையை உலக சுகாதார அமைப்பு பாராட்டியுள்ளதாகவும் அத்திட்டத்தை உலகம் பூராவும் செயல்படுத்த உலக சுகாதார அமைப்பு நடவடிக்கை எடுத்துள்ளதோடு அவ்வமைப்பு இலங்கைக்கு விருது ஒன்றையும் வழங்குவதற்கு தயாராகி வருவதாக சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

Mon, 12/20/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை