மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த பெண் மரணம்

மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த பெண் மரணம்-Motorcycle Accident-Woman Died

- ஏற்றி வந்தவர் யார் என்பதில் குழப்பம்

திருகோணமலை, மஹதிவுல்வெவ பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த பெண்ணொருவர்  மட்டக்களப்பு பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில்  சிகிச்சை பலனின்றி நேற்றிரவு (20) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர், மொரவெவ  மஹதிவுல்வெவ பகுதியைச் சேர்ந்த எச்.பீ. சந்ராவதி (53) என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது, குறித்த பெண்ணின்  பேரன் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரை பார்வையிடுவதற்காக ரொட்டவெவ கிராமத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் இருந்து வீழ்ந்து படுகாயமடைந்த நிலையில் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் நேற்று 20ஆம் திகதி காலை 6.30 மணியளவில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் தலையில் ஏற்பட்ட காயத்தினால் மேலதிக சிகிச்சைக்காக உடனடியாக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் தலையில் ஏற்பட்ட காயத்தில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டிய நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

இதேவேளை, குறித்த பெண்ணை ஏற்றி வந்த இளைஞர்  தான் மோட்டார் சைக்கிளில் ஏற்றவில்லை எனவும்  தனக்கும் விபத்துக்கும் தொடர்பில்லை எனவும் பொலிஸ் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

இருந்தபோதிலும் வவுனியாவிலிருந்து மட்டக்களப்பு நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரொருவர் இந்தப் பெண்ணை ஏற்றி வந்துள்ளதாகவும் யார் எவர் என்பது பற்றி விவரம் தெரியவில்லை எனவும் மொரவெவ பொலிசார் குறிப்பிடுகின்றனர்.

இருந்தும் தூர இடத்தில் இருந்து வருகை தருபவர்கள் மோட்டார் சைக்கிளில்  தெரியாதவர்களை ஏற்றிச் செல்ல மாட்டார்கள் எனவும் பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.

இருந்தபோதிலும் இவ்விபத்து தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் இவ்விபத்து தொடர்பில் மொரவெவ பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(ரொட்டவெவ குரூப் நிருபர் - அப்துல்சலாம் யாசீம்)

Sun, 11/21/2021 - 13:40


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை