தென்னாபிரிக்காவிடம் போராடி தோல்வியடைந்த இலங்கை!

20க்கு20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணிக்கு எதிரான சுபர் 12 போட்டியில், இறுதிநேர அபாரத்தை காண்பித்த தென்னாபிரிக்க அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றுக்கொண்டது.

சார்ஜா அரங்கில் இடம்பெற்ற இந்த போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்கா அணி, முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. அதன்படி, களமிறங்கிய இலங்கை அணிக்கு எதிர்பார்க்கப்பட்ட ஓட்டக்குவிப்பு கிடைக்கவில்லை.

ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய பெதும் நிஸ்ஸங்க மாத்திரம் அரைச்சதம் கடந்து இறுதிவரை அணிக்காக போராடிய நிலையில், ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் சோபிக்க தவறினர்.

பெதும் நிஸ்ஸங்க அதிபட்சமாக 58 பந்துகளில் 72 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, ஏனைய துடுப்பாட்ட வீரர்களில், சரித் அசலங்க 21 ஓட்டங்களையும், தசுன் ஷானக 11 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். ஏனைய துடுப்பாட்ட வீரர்களில் எவரும் இரட்டை இலக்க ஓட்டங்களை பெறவில்லை.

தென்னாபிரிக்க அணிசார்பில், டெப்ரைஷ் ஷம்ஷி மற்றும் டுவைன் பிரிட்டோரியர்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்த, என்ரிச் நோக்கியா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணிக்கு, வனிந்து ஹஸரங்கவின் ஹெட்ரிக்குடன் கடுமையான அழுத்தத்தை இலங்கை அணி கொடுத்த போதும், லஹிரு குமாரவின் இறுதி ஓவரால் இலங்கை அணி வெற்றியை தவறவிட்டது.

இறுதி ஓவருக்கு 15 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், டேவிட் மில்லர் லஹிரு குமாரவின் ஓவருக்கு 2 சிக்ஸர்களை விளாசி அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்தார். எனவே, 19.5 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து தென்னாபிரிக்க அணி வெற்றியிலக்கை அடைந்தது.

தென்னாபிரிக்கா அணிசார்பில் டெம்பா பவுமா 46 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்த போதும், டேவிட் மில்லர் 13 பந்துகளுக்கு 23 ஓட்டங்களையும், எய்டன் மர்க்ரம் 19 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில், வனிந்து ஹஸரங்க 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்ததுடன் ஹெட்ரிக் சாதனையையும் படைத்திருந்தார்.

இவர் தன்னுடைய 15வது ஓவரின் இறுதிப்பந்தில் எய்டன் மர்க்ரமை ஆட்டமிழக்கச் செய்ததுடன், 18வது ஓவரின் முதலிரண்டு பந்துகளில் டெம்பா பவுமா மற்றும் டுவைன் பிரிட்டோரியர்ஸ் ஆகியோரை வெளியேற்றி ஹெட்ரிக் சாதனையை படைத்தார். இவருக்கு அடுத்தப்படியாக துஷ்மந்த சமீர 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த போட்டியில் வெற்றிபெற்றதன் ஊடாக, தென்னாபிரிக்க அணி புள்ளிப்பட்டியலில், 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளதுடன், இலங்கை அணி தொடர்ந்தும் 4வது இடத்தை தக்கவைத்துள்ளது.

Sun, 10/31/2021 - 06:00


from thinakaran

கருத்துரையிடுக

புதியது பழையவை