ரி 20 உலகக் கிண்ணத்தில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி இங்கிலாந்து 8 விக்கெட்டுக்களால் இலகு வெற்றி

ரி 20 உலகக் கிண்ண சுபர் 12 சுற்றுக்காக அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் மோதிய போட்டியில், இங்கிலாந்து கிரிக்கெட் அணி 8 விக்கெட்டுக்களால் இலகு வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.

மேலும் இப்போட்டியின் வெற்றியுடன் இங்கிலாந்து ரி 20 உலகக் கிண்ணத்தில் தொடர்ச்சியாக மூன்று வெற்றிகளுடன் தொடரில் தமது அரையிறுதி வாய்ப்பினை அதிகரித்துக்கொள்ள, அவுஸ்திரேலிய அணி இந்த ரி20 உலகக் கிண்ணத்தில் தமது முதல் தோல்வியினைப் பதிவு செய்து கொள்கின்றது.

முன்னதாக துபாய் நகரில் ஆரம்பமான போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைவர் இயன் மோர்கன் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை அவுஸ்திரேலிய வீரர்களுக்கு வழங்கினார்.

அதன்படி, போட்டியில் முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலிய வீரர்கள் இங்கிலாந்தின் வேகப்பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் தடுமாறினர். இதனால் தொடக்கத்தில் இருந்தே சரிவினை சந்தித்த அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி 20 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 125 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது.

அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்டம் சார்பில் அதன் தலைவர் ஆரோன் பின்ச் அதிகபட்சமாக 49 பந்துகளுக்கு 4 பௌண்டரிகள் அடங்கலாக 44 ஓட்டங்களினை எடுத்திருந்தார்.

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு சார்பில் கிறிஸ் ஜோர்டன் வெறும் 17 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களைச் சாய்க்க, கிறிஸ் வோக்ஸ் மற்றும் டைமால் மில்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தனர்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 126 ஓட்டங்களை அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய இங்கிலாந்து கிரிக்கெட் அணி போட்டியின் வெற்றி இலக்கினை வெறும் 11.4 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 126 ஓட்டங்களுடன் அடைந்தது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வெற்றியினை உறுதி செய்த ஜோஸ் பட்லர் ரி 20 சர்வதேச போட்டிகளில் தன்னுடைய 14ஆவது அரைச்சதத்துடன் வெறும் 32 பந்துகளுக்கு 5 சிக்ஸர்கள் மற்றும் 5 பௌண்டரிகள் அடங்கலாக 71 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்காமல் இருந்திருந்தார்.

மறுமுனையில் அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு சார்பில் அஸ்டன் ஏகார் மற்றும் அடம் ஷம்பா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்திருந்தனர்.

போட்டியின் ஆட்டநாயகன் விருது, இங்கிலாந்து அணியின் பந்துவீச்சாளரான கிறிஸ் ஜோர்டனிற்கு வழங்கப்பட்டது.

இனி இங்கிலாந்து ரி 20 உலகக் கிண்ணத்திற்கான தமது அடுத்த போட்டியில் இலங்கையினை இன்று திங்கட்கிழமை (01) எதிர்கொள்ள அவுஸ்திரேலியா தமது அடுத்த மோதலில் பங்களாதேஷினை எதிர்வரும் வியாழக்கிழமை (04) எதிர்கொள்கின்றது.

Mon, 11/01/2021 - 06:00


from thinakaran

கருத்துரையிடுக

புதியது பழையவை