கண்டி மறைமாவட்டத்தின் புதிய ஆயராக வெலன்ஸ் மெண்டிஸ் ஆண்டகை

கண்டி மறைமாவட்டத்தின் புதிய ஆயராக வெலன்ஸ் மெண்டிஸ் ஆண்டகை-Pope Francis Appointed -Bishop Valence Mendis as New Bishop of Kandy

- பரிசுத்த பாப்பரசரால் நியமனம்

கண்டி மறைமாவட்டத்தின் புதிய ஆயராக சிலாபம் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு வெலன்ஸ் மெண்டிஸ் ஆண்டகை நியமிக்கப்பட்டுள்ளார்.

கண்டி மறைமாவட்டத்தின் ஆயராக நீண்ட காலம் பணியாற்றிய பேரருட்திரு ஜோசப் வியான்னி பெனாண்டோ ஆண்டகை ஓய்வு பெறும் நிலையில் பரிசுத்த பாப்பரசர் முதலாவது பிரான்சிஸினால் ஆயர் வெலன்ஸ் மெண்டிஸ் ஆண்டகை புதிய கண்டி மறைமாவட்ட ஆயராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கண்டி மறைமாவட்ட ஆயராக பதவியேற்றுள்ள வெலன்ஸ் மெண்டிஸ் ஆண்டகை அதற்கு மேலதிகமாக சிலாபம் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க நிர்வாக ஆயராகவும் பணியாற்றவுள்ளார்.

பரிசுத்த பாப்பரசரின் இலங்கைக்கான அப்போஸ்தலிக்க பிரதிநிதி ஆயர் ப்ரயன் உடக்வே ஆண்டகை பரிசுத்த பாப்பரசரின் இந்த அறிவித்தலை உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளார்.

1958ஆம் ஆண்டு கொரலவெல்ல பிரதேசத்தில் பிறந்த வெலன்ஸ் மெண்டிஸ் ஆண்டகை 1985 ஆம் ஆண்டு அருட்தந்தையாக திருநிலைப்படுத்தப்பட்டுள்ளதுடன் 2005 ஆம் ஆண்டு சிலாபம் மறைமாவட்ட துணை ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டு அதனைத் தொடர்ந்து சிலாபம் மறைமாவட்ட ஆயராக இதுவரை பணியாற்றியுள்ளார்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ள அவர் அந்தப் பல்கலைக்கழகத்தின் மெய்யியல் துறையில் பகுதி நேரப் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார். இத்தாலி, ஜெர்மன், லத்தீன், ஆங்கிலம்,சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளில் பரிச்சயமுள்ள ஆயர் வெலண்ஸ் மென்டிஸ் தேசிய மெய்யியல் குருத்துவக் கல்லூரியின் முதல் இயக்குநராகவும் கத்தோலிக்க ஆயர் பேரவையில் பல்வேறு முக்கிய பதவிகளையும் வகித்துள்ளார்.

1886ஆம் ஆண்டு செப்டம்பர் முதலாம் திகதி உருவாக்கப்பட்ட கண்டி மறைமாவட்டத்தில் தற்போது 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கத்தோலிக்க மக்கள் வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது (ஸ)

(லோரன்ஸ் செல்வநாயகம்)

Sun, 10/10/2021 - 16:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை