சுகாதார கட்டுப்பாடுகளுடன் நாடு இன்று மீளவும் திறப்பு

மக்கள் பின்பற்ற வேண்டிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியானது   

தனிமைப்படுத்தலுக்கான ஊரடங்குச் சட்டம் இன்று அதிகாலை 4 மணிக்கு நீக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாடுகளுடன் நாடு திறக்கப்பட்டுள்ள நிலையில் சுகாதார அமைச்சு நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய சுகாதார வழிகாட்டல்களை வெளியிட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் தலைமையில் நேற்று சுகாதார அமைச்சில் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டின்போது சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட மருத்துவ நிபுணர் அசேல குணவர்தனவின் கையொப்பத்துடன் மேற்படி வழிகாட்டல் வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கிணங்க இன்றைய தினம் முதல் எதிர்வரும் ஒக்டோபர் 31ஆம் திகதி வரையிலான ஒரு மாத காலத்திற்கு பொது செயற்பாடுகள் இடம்பெற வேண்டிய முறைமை தொடர்பில் விடயங்கள் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

ஒக்டோபர் முதலாம் திகதி முதல் 15ஆம் திகதி வரையான நடைமுறை, அதனையடுத்து 16 ஆம் திகதியிலிருந்து 31ஆம் திகதி வரையிலான நடைமுறை வழிகாட்டல்களும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்த நிலையில் கடந்த ஓகஸ்ட் 20ஆம் திகதி முதல் பொது நடவடிக்கைகளுக்காக கடும் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த நேர்ந்தது. அதனால் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடிந்துள்ளதுடன் நாளாந்தம் புதிதாக இனங்காணப்படும் வைரஸ் தொற்று நோயாளர்கள் மற்றும் மரணங்களின் எண்ணிக்கைகளும் தொடர்ந்தும் குறிப்பிடத்தக்க வகையில் காணப்படுகின்றன.

தொடர்ச்சியான கடும் கட்டுப்பாடுகளை விதிக்கின்ற போது பெரும்பாலானோர் பொருளாதார ரீதியில் பாதிப்புகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

அந்த வகையில் தொடர்ச்சியாக நிலவும் இந்த கொரோனா சூழ்நிலையில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டல்களை முறைப்படி பின்பற்றுவது முக்கியமாகும்.

கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தல் நடவடிக்கைகள் தொடர்பில் அனைவருக்கும் தெளிவுபடுத்தல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், சவர்க்காரம் அல்லது செனிடைசர் உபயோகித்து கைகளை சுத்தப்படுத்தல்,

முறையாக முகக் கவசங்களை அணிதல்,

அனைத்து சேவை நிலையங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு வருகைதரும் நோயாளர்கள் மற்றும் ஊழியர்களை மட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், நிறுவனங்களுக்குள் அனைவரும் சுகாதார வழிமுறைகளை முறையாக பின்பற்றுவதை ஊக்கப்படுத்தல்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பிலான அனைத்து செயற்பாடுகளையும் கண்காணிப்பதற்காக பொறுப்புள்ள அதிகாரிகளை நியமித்தல், அறிவுறுத்தலுக்கு பொருத்தமான வேலைத்திட்டங்களை ஒன்லைன் மூலமாகவோ அல்லது பொருத்தமான பாதுகாப்பு பொறிமுறை ஊடாகவே செயற்படுத்துதல் அவசியமாகும்.

நூற்றுக்கு நூறு வீதம் தடுப்பூசி பெற்றுக்கொள்வதை ஊக்குவித்தல்,

அத்துடன் அத்தியாவசிய செயற்பாடுகள் தவிர்ந்த ஏனைய தேவைகளுக்கான மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடையை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துதல்.

இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை அத்தியாவசியமற்ற பயணங்களுக்கான அனுமதியை வழங்காதிருத்தல்.

பாதுகாப்பான போக்குவரத்து முறைமையை உபயோகித்தல் மற்றும் வழங்குதல். குறைந்தளவு பயணிகளுடன் போக்குவரத்து ஏற்பாடுகளை மேற்கொள்வது தொடர்பான கவனத்தை அதிகரித்தல்.

பொது போக்குவரத்துகளில் ஆசனங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட வகையிலேயே பயணிகளை அனுமதித்தல்.

பொது போக்குவரத்துகளில் வாயுசீராக்கிகளை (ஏஸி) உபயோகிக்காது ஜன்னல்களை திறந்து வைத்தல்.

அத்துடன் அனைத்து சந்தர்ப்பங்களிலும் முகக் கவசங்களை முறைப்படி அணிதல்.

வீட்டிலிருந்து தொழிலுக்காக மற்றும் மருத்துவ தேவைகளுக்காகவும் அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக வெளியே செல்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வீடுகளில் ஏற்பாடு செய்யப்படும் விருந்துபசார நிகழ்வுகள் உள்ளிட்ட அனைத்து உள்ளக மற்றும் வெளியக விருந்துபசாரங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

ஒன்றுகூடல் களுக்கு தொடர்ந்தும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பதிவுத் திருமணங்களை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் பத்துப் பேருக்கு மாத்திரமே திருமண நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 16ஆம் திகதிக்குப் பின்னர் திருமண மண்டபங்களில் 50 நபர்களுக்கு மேற்படாத வகையில் அல்லது மண்டப கொள்ளளவில் 25 சதவீதமானவர்களை உள்ளடக்கியதாக திருமண வைபவங்களை நடத்தமுடியும். எவ்வாறெனினும் அந்த திருமண நிகழ்வுகளில் மதுபான உபசாரங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது.

மரண நிகழ்வுகளில் இறுதிக் கிரியைகளை 24 மணித்தியாலத்திற்குள் நிறைவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மரண நிகழ்வுகளில் ஒரே தலைமையில் 10 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனினும் எதிர்வரும் 16ம் திகதிக்குப் பின்னர் மரணநிகழ்வில் ஒரே சந்தர்ப்பத்தில் 15 பேர் கலந்து கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட உள்ளது.

சமய வழிபாடுகள் மற்றும் கூட்டு வழிபாடுகள் உள்ளிட்ட கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

பாடசாலைகளைத் திறக்கும் செயற்பாடுகளில் முதற்கட்டமாக 200க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களை சுகாதார வழிகாட்டலுக்கு அமைய ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் முன் பள்ளிகளை 50 வீதமான மாணவர்கள் கொள்ளளவுடன் முன்னெடுத்துச் செல்ல முடியும் என்றும் பகல் நேர சிறுவர் பராமரிப்பு நிலையங்களை திறப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சினிமா திரையரங்குகள் மற்றும் விளையாட்டு நடவடிக்கைகளுக்கும் கண் காட்சிகளுக்கும் மேலதிக வகுப்புகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

நிறுவனங்களுக்கு அழைக்கப்படும் ஊழியர்களின் எண்ணிக்கையை அனைத்து சந்தர்ப்பங்களிலும் மட்டுப்படுத்தல் அத்துடன் வீடுகளிலிருந்து பணி புரிவதை ஊக்குவித்தல். அத்தியாவசிய சேவைகள் மற்றும் கைத்தொழில் நிறுவனங்களுக்கு இது பொருந்தாது எனினும் அனைத்து சேவைகளில் இந்த கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தல். அதற்கிணங்க கடமைக்கு அழைக்கவேண்டிய ஊழியர்களின் எண்ணிக்கையை நிறுவனத்தின் தலைவர் தீர்மானிக்கமுடியும்.

மறு அறிவித்தல் வரை எந்தவொரு கூட்டங்களுக்கும் அனுமதி வழங்கப்படமாட்டாது.

மேற்படி வழிகாட்டல்களுக்கு அமைய செயற்பாடுகள் இடம்பெறுகின்றனவா என்பதை ஆராய்வதற்காக முறைப்படுத்தல் வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவது அவசியம் என்றும் சுகாதார அமைச்சின் வழிகாட்டல்களில் வலியுறுத்தப்பட்டுள்ளது.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Fri, 10/01/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை