பிணையில் விடுவிக்கப்பட்ட சகலருக்கும் எதிராக வழக்கு?

ரிஷாத்தின் மனைவி, சகோதரர் மீது கேள்விக்குறி

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் இல்லத்தில் பணிபுரிந்த நிலையில் தீக்காயங்களுக்கு உள்ளாகி சிறுமி ஹிஷாலினி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்று மிக விரைவாக வழக்கு தொடர்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் இதனைத் தெரிவித்தார்.

இதற்கமைய சிறுமி ஹிஷாலினி மரணித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள சகல தரப்பினருக்கு எதிராகவும் வழக்கு தொடரப்படவுள்ளது.

எவ்வாறாயினும் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் மனைவி மற்றும் அவரது சகோதரருக்கு எதிராக வழக்கு தொடரப்படமாட்டாது என குறித்த பொலிஸ் அதிகாரி குறிப்பிட்டார்.

அவர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை இதுவரையில் நிரூபிக்க முடியாமல் போன காரணத்தினால் அவர்கள் மீது வழக்கு தொடர முடியாது என அவர் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் மனைவியினது சகோதரரால் தாம் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக முன்னர் அவர்களது வீட்டில் கடமையாற்றிய பெண் ஒருவர் தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும் குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட மருத்துவ பரிசோதனைகளில் அதனை உறுதிபடுத்திக் கொள்ள முடியாமல் போனது. அத்துடன், அவரது கைப்பேசி தற்போது அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லோரன்ஸ் செல்வநாயகம்

Wed, 10/20/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை