இலாபமீட்டும் நிலைக்குக் கொண்டுவர மேலும் ஆக்கபூர்வமாக செயற்பட வேண்டும்

இலாபமீட்டும் நிலைக்குக் கொண்டுவர மேலும் ஆக்கபூர்வமாக செயற்பட வேண்டும்

- வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அளகப்பெரும

நஷ்டத்தில் இயங்கும் அரசாங்க ஊடகங்களை மீண்டும் இலாபமீட்டும் நிலைக்குக் கொண்டுவர ஆக்கபூர்வமான திட்டங்கள் முன்வைக்கப்பட வேண்டுமென வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

அரசாங்க ஊடகங்களில் படைப்பாற்றல் குறைந்து வருவதை ஏற்றுக் கொண்ட அமைச்சர், இது தொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டார்.

அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அரசாங்க ஊடகமொன்றைப் பராமரிப்பதற்கு ஒரு நிறுவனத்துக்கு மாதமொன்றுக்கு 35 மில்லியன் ரூபா செலவுசெய்ய வேண்டியிருப்பதாகவும், சில நிறுவனங்களுக்கு 45 மில்லியன் ரூபா வரையில் செலவாவதாகவும் சுட்டிக்காட்டிய அமைச்சர், அரசாங்க ஊடகங்கள் வணிக ரீதியாகத் தோல்வியடைவதை அரசாங்கத்தினால் தாங்க முடியாதென்றும் குறிப்பிட்டார்.

இதனை விடவும் தொலைக்காட்சி அலைவரிசைகளில் வன்முறைகள் நிறைந்த மற்றும் சிறுவர்களுக்குப் பொருத்தமற்ற விடயங்களுடன் கூடிய திரைப்படங்கள் விளம்பரப்படுத்தப்படுவதாகவும், அவற்றை விளம்பரப்படுத்தப் பொருத்தமான ஒளிபரப்பு நேரத்தைப் பரிந்துரைப்பதற்கு வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் இங்கு வலியுறுத்தப்பட்டது.

பாராளுமன்ற அமர்வுகளை அறிக்கையிடும் ஊடகங்களில் முக்கியமான விடயங்கள் தவிர்க்கப்படுவதாகவும், இதனால் பாராளுமன்றத்தில் நடைபெறுகின்ற நாட்டுக்கு முக்கியமான சட்டமூலங்களை சமர்ப்பிப்பது, அவற்றை நிறைவேற்றுவது மற்றும் அவை தொடர்பான விவாதங்கள் போன்றவற்றை உள்ளடக்கிய விசேட நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இது தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு அமைச்சர் அரசாங்க ஊடகங்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

வடபகுதியில் உள்ளவர்களில் 85 சதவீதமானவர்கள் இந்தியத் தொலைக்காட்சிகளைப் பார்வையிடுவதற்குப் பழகியிருப்பதால் அப்பகுதிகளிலுள்ள சிறுவர்கள் மத்தியில் இந்நாட்டில் இடம்பெறும் நிகழ்வுகள் தொடர்பில் பொது அறிவு குறைவாகவே உள்ளதென்பதும் இங்கு தெரியவந்தது.

நேத்ரா அலைவரிசையினூடாக முற்பகல் 4.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணிவரை முதலாம் தரத்திலிருந்து 13ஆவது தரம் வரையில் தமிழ் மொழி மாணவர்களுக்கான கல்வி நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுவதாக இங்கு கருத்துத் தெரிவித்த இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரெஜினோல்ட் குரே குறிப்பிட்டார்.

அரசாங்க ஊடகங்களினூடாக வழங்கப்படும் தகவல்கள் நாட்டிலுள்ள தமிழ் மக்கள் மத்தியில் சரியாகக் கடத்தப்படாமையே இதற்குக் காரணமென்றும் அமைச்சர் தெரிவித்தார்.

அரசாங்க ஊடகங்களின் பணிப்பாளர் சபையில் தமிழ் பிரதிநிதிகளையும் உள்ளடக்க வேண்டியதன் அவசியத்தை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

நாட்டில் காணப்படும் பொருளாதார நிலைமையின் காரணமாக அடுத்த வருடம் அமைச்சுக்கான எந்தவொரு புதிய கட்டுமானப் பணிகளுக்கும் அரசாங்கத்தின் நிதி ஒதுக்கப்படாதென்றும் அமைச்சர் இங்கு தெரிவித்தார்.

Mon, 10/25/2021 - 09:36


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை