பொது மக்கள் அசௌகரியத்திற்கு உள்ளாவதை அனுமதிக்க முடியாது

பொலிஸ் தலைமையகம் ஒருபோதும் அனுமதிக்காது என்கிறார் SSP நிஹால் தல்துவ

ஏறாவூர் சம்பவம் குறித்து சம்பந்தபட்ட பொலிஸ் அதிகாரி மீது கடும் சட்ட நடவடிக்கை எனவும் தெரிவிப்பு

 

பொது மக்களை சங்கடத்துக்குள்ளாக்கும் வகையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் செயற்படுவதை பொலிஸ் தலைமையகம் ஒருபோதும் அனுமதிக்காது. ஏறாவூர் சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக கடும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

ஏறாவூர் சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தர் சனிக்கிழமை முற்பகல் ஏறாவூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் ஒரு இலட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். இச் சம்பவம் தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,..

மட்டக்களப்பு - ஏறாவூர் பொலிஸ் பிரிவில்,மட்டக்களப்பு - வாழைச்சேனை வீதியில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் வீதியில் விசாரணைகளை முன்னெடுத்துக் கொண்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மோட்டார் சைக்கிளில் சென்ற நபர்களை துரத்திச் சென்று பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அவர்களை தாக்கும் காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து , துரிதமாக விசாரணைகளை முன்னெடுப்பதற்கு மட்டக்களப்பிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபருக்கு ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது.

அதற்கமைய இப்பிரிவின் பொலிஸ் உத்தியோகத்தர்களால் இது தொடர்பில் விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு உடன் அமுலாகும் வகையில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் பணியிடை நிறுத்தப்பட்டுள்ளார்.

அத்தோடு சனிக்கிழமை முற்பகல் ஏறாவூர் பொலிஸாரால் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்ந்து ஏறாவூர் நீதவான் நீதிமன்றத்தில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து ஒரு இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு பொது மக்கள் பாதிக்கப்படும் வகையில் பொலிஸ் உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை பொலிஸ் தலைமையகம் ஒருபோதும் அனுமதிக்காது.

எனவே குறித்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. அத்தோடு அவருக்கு எதிராக ஆரம்பகட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பொது மக்களை அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் இவ்வகை செயற்பாடுகள் தொடர்பில் தொடர்ந்தும் அவதானம் செலுத்தப்படும்.

இவ்வாறானவர்களுக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை,ஒழுக்க ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனில் அதனை செய்வதற்கும் தொடர்ந்தும் செயற்படுவோம் என்றும் தெரிவித்தார்.

 

லோரன்ஸ் செல்வநாயகம்

Mon, 10/25/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை