பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் சட்டங்களில் மாற்றம்

மூன்று வருடங்களில் நடைமுறைப்படுத்தப்படும் என்கிறார் நீதியமைச்சர்

60 க்கும் மேற்பட்ட சட்டங்கள் ஏற்கனவே திருத்தப்பட்டுள்ளதோடு எதிர்வரும் 03 வருடங்களில் பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தக்கூடிய சட்டங்களை ஆராய்ந்து நீதிச் சேவை ஆணைக்குழுவுடன் இணைந்து தேவைப்பட்டால் அவற்றை விரைவாக திருத்தம் செய்யவுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். சட்டத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கையை வலுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கவும் இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்தின் கீழ் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மதவாச்சி மாவட்ட மற்றும் நீதவான் நீதிமன்றங்கள், கஹட்டகஸ்திகிலிய மாவட்ட மற்றும் நீதவான் நீதிமன்றங்கள் ஆகியவை ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டன.

157 மில்லியன் ரூபா செலவில் மதவாச்சி மாவட்ட மற்றும் நீதவான் நீதிமன்ற கட்டடம் நிர்மாணிக்கப்பட்டதோடு கஹட்டகஸ்திகிலிய நீதிமன்ற கட்டடம் 102 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டது. இந்த இரண்டு நீதிமன்றங்களும் இதுவரை சுற்றுலா மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களாக செயல்பட்டு வந்ததோடு அவை நிரந்தர நீதிமன்றங்களாக செயல்படுமென நீதி அமைச்சு தெரிவித்ததது.

நிலுவையிலுள்ள வழக்குகளைக் குறைப்பதற்கும், வழக்குகளை விரைவுபடுத்துவதற்கும், தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்கும் நீதிமன்ற வளாகங்ளை நிர்மாணித்தல் மற்றும் அவற்றின் குறைபாடுகளை கண்டறிந்து நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாடுமுழுவதுமுள்ள நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளை தாமதமின்றி முடிவுக்குக் கொண்டுவருவது அரசாங்கத்தின் பிரதான நோக்கமாக உள்ளது.

செயற்திறன் மற்றும் பயனுள்ள வகையில் நீதியை நிலைநாட்டும் பொறிமுறையொன்றை உருவாக்குவதன் மூலம் நாட்டில் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்காக நீதி அமைச்சர் அலி சப்ரி ஆறு அம்ச திட்டமொன்றை முன்னெடுத்து வருகிறார்.

தேவைக்கேற்ப நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரித்தல், அறிக்கையிடும் நீதிபதி பதவியை நிறுவுதல்,விசாரணைக்கு முந்திய நீதிமன்றங்கள் மற்றும் சிறு உரிமை நீதிமன்றங்களை நிறுவுவதன் மூலம் நீதித்துறையில் தேவையான கட்டமைப்பு ரீதியான மாற்றங்களைச் மேற்கொள்ளல், உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கு மூன்றாண்டு கால திட்டத்தை செயல்படுத்துதல் மற்றும் நீதித்துறையை டிஜிட்டல் மயமாக்குதல், சட்ட வல்லுநர்களின் உதவியுடன் சட்ட கட்டமைப்பை புனரமைப்பதற்கான பாரிய திட்டம் மற்றும் மாற்று பிணக்க பொறுமுறை ஒன்றை உருவாக்குதல் என்பனவே அவையாகும்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர், வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்தும் முறைமைய விஸ்தரிப்பதற்காக நீதிமன்றங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை அதிகரிப்பதை போன்றே காலவதியான சட்டங்களை சீர்திருத்துவதன் மூலம் வழக்குகளை விரைவுபடுத்த வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். (பா)

ஷம்ஸ் பாஹிம்

Thu, 10/28/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை