விசாரணைகள் தொடர்பில் அரசு அல்லது பொலிஸார் மீது குற்றம் சுமத்த முடியாது

- பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிப்பு

தாக்குதல் சம்பவம் குறித்துஅனைத்து நடவடிக்கைகளும்எடுத்தாகிவிட்டது என்கிறார்

 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் சம்பந்தமாக அரசாங்கத்திற்கோ அல்லது பொலிஸாருக்கோ எதிராக குற்றம் சுமத்தமுடியாதென பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாரினால் மேற்கொள்ளவேண்டிய அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுவிட்டது என்றும் வழக்கு தொடர்வது தொடர்பான விடயம் சட்ட மா அதிபரின் கைகளிலேயே தங்கியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர்  ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போது அமைச்சர் சரத் வீரசேகர இவ்வாறு தெரிவித்துள்ளார். அதுதொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

இத்தாக்குதல் சம்பவ விசாரணை தொடர்பான ஆவணங்கள் சட்ட மா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தற்போது ஐந்து மேல் நீதிமன்றங்களில் ஒன்பது வழக்குகள் நடைபெற்று வருகின்றன. அத்துடன் அதற்கான திட்டங்களை தீட்டியுள்ள பயங்கரவாதிகள் 24 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்செய்யப்பட்டுள்ளது. மேல்நீதிமன்ற நீதிபதிகள் மூவர் கொண்ட நீதிபதிகள் குழாம் நியமிக்கப்பட்டு தினமும் வழக்கு விசாரணைகளை மேற்கொள்வதற்கான முறைமை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த விசாரணைகளை மறைப்பதாக எவரும் அரசாங்கத்திற்கோ அல்லது பொலிசாருக்கோ எதிராக குற்றம் சுமத்தமுடியாது. 2001 செப்டெம்பர் 11 ஆம் திகதி உலக வர்த்தக மையத்தில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் தொடர்பில் அதனை மேற்கொண்ட சேக் முகம்மட் என்ற நபருக்கு எதிராக கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்புதான் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வகையில் இருபது வருடங்களின் பின்னரே அதற்கான வழக்கு தொடரப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் சம்பந்தமாக எம்மால் திருப்தியடைய முடியும். பொலிஸ் துறைக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் நாம் மேற்கொள்ளவேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் நிறைவு செய்து அதுதொடர்பான ஆவணங்களை சட்ட மா அதிபருக்கு கையளிக்கப்பட்டுள்ளது.

வழக்கு தொடர்வதற்கான விடயம் சட்ட மா அதிபரின் கைகளிலேயே உள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். (ஸ)

 

 லோரன்ஸ் செல்வநாயகம்

Thu, 10/28/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை