உலகில் கொரோனா தொற்று பாதிப்பில் தொடர்ந்து வீழ்ச்சி

உலகளாவிய ரீதியில் 3.1 மில்லியன் புதிய கொரோனா தொற்றுச் சம்பவங்கள் மற்றும் 54,000க்கும் மேற்பட்ட புதிய உயிரிழப்புகளுடன் கடந்த வாரத்தில் அந்த நோய்த் தொற்றில் தொடர்ந்து வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் நோய்த் தொற்றுச் சம்பவங்களில் 9 வீதம் வீழ்ச்சி ஏற்பட்டபோதும் உயிரிழப்புகள் மாற்றமின்றி நீடிப்பதாக கடந்த வாரத்தின் கொரோனா தொற்று பாதிப்புக் குறித்த அறிக்கையில் உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டது. கடந்த ஓகஸ்ட் மாதம் தொடக்கம் நோய்த் தொற்றின் வீழ்ச்சிப் போக்கு தொடர்ந்து அவதானிக்கப்பட்டு வருவதாக அது குறிப்பிட்டது.

கடந்த செப்டெம்பர் 27 தொடக்கம் ஒக்டோபர் 3 வரையான காலத்தில் புதிய தொற்றுச் சம்பவங்களில் அனைத்து பிராந்தியங்களிலும் வீழ்ச்சி ஏற்பட்டபோதும், ஐரோப்பாவில் முந்திய வாரத்துடன் ஒப்பிடுகையில் மாற்றமின்றி காணப்படுகிறது.

இதில் ஆபிரிக்காவில் மிகப்பெரிய வீழ்ச்சியாக நோய்ப் பாதிப்பு 43 வீதம் குறைந்துள்ளது. உலகளவில் கொரோனா தொற்று சம்பவங்கள் 234 மில்லியனைத் தாண்டியுள்ளதோடு உயிரிழப்பு 4.8 மில்லியனுக்குக் கீழ் உள்ளது.

Fri, 10/08/2021 - 10:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை