2 திருத்தச் சட்டமூலங்கள்; ஒழுங்குவிதி ஆகியன நீதி அமைச்சினால் இன்று பாராளுமன்றத்திற்கு

2 திருத்தச் சட்டமூலங்கள்; ஒழுங்குவிதி ஆகியன நீதி அமைச்சினால் இன்று பாராளுமன்றத்திற்கு-Justice Minister to Present two Amendment Bills and a Regulation in Parliament

இரு திருத்தச்சட்டமூலங்கள் மற்றும் ஒரு ஒழுங்குவிதி ஆகியவற்றை இன்று (21) பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கு நீதி அமைச்சர் எம்.யு.எம். அலி சப்ரி தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை (15) நடைபெற்ற நீதி அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

இதற்கமைய இளந்தவறாளர்கள் (பயிற்சிப் பாடசாலைகள்) (திருத்தச்) சட்டமூலம் , தண்டனைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் மற்றும் குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவையின் 214 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 840 ஆம் பிரிவின் கீழ் நிதி அமைச்சரினால் 2021 ஜுலை 02ஆம் திகதி வெளியிடப்பட்ட 2234/67 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதி என்பன விவாதத்தின் பின்னர் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவுள்ளன.

இளந்தவறாளர்கள் (பயிற்சிப் பாடசாலைகள்) (திருத்தச்) சட்டமூலத்தின் ஊடாக முதலில் வகுக்கப்பட்டிருந்த 18 என்ற வயதெல்லை 18- – 22 எனத் திருத்தப்படுகிறது. பாலியல் நடுநிலையைப் பேணுவதும் இச்சட்டத்திருத்தத்தின் நோக்கமாகும். தண்டனைச் சட்டக்கோவையில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தத்தின் ஊடாக பதினெட்டு வயதுக்கு உட்பட்ட ஆளுக்கெதிராக மரண தண்டனை வழங்குவதற்குப் பதிலாக தடுத்து வைத்தல் நிறுவனமொன்றில் தடுத்துவைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன.

இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, பாராளுமன்ற உறுப்பினர்களான சாகர காரியவசம், கலாநிதி சுரேன் ராகவன், மதுர விதானகே, நிதி அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே.மாயாதுன்ன உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Thu, 10/21/2021 - 09:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை