தனிப்பட்ட பாவனைக்கு எடுத்துவரும் பொருட்களுக்கு எந்த தடையுமில்லை

இறக்குமதி வரையறைகள் தொடர்பில் நிதியமைச்சு விளக்கம்

வெளிநாடுகளிலிருக்கும் இலங்கையர்கள் மீண்டும் நாட்டுக்கு திரும்பும்போது அவர்களின் தனிப்பட்ட பாவனைக்காக கொண்டுவரும் பொருட்களுக்கு புதிதாக வரையறைகள் எதுவும் விதிக்கப்படவில்லை என நிதி அமைச்சின் செயலாளர் எஸ். ஆர். ஆட்டிகல தெரிவித்தார்.

இலங்கை மத்திய வங்கியினால் 623 பொருட்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருக்கும் வரையறை, வெளிநாடுகளிலிருந்து நாட்டுக்கு வருபவர்கள் கொண்டுவரும் பொருட்களும் உள்ளடக்குவதாக தெரிவிக்கப்படுவது தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், அத்தியாவசியமற்ற பொருட்கள் என தெரிவித்து 623 பொருட்களை இறக்குமதி செய்வதற்கு மத்திய வங்கி நிபந்தனைகளை விதித்துள்ளது. இந்த விடயத்தை ஒரு சிலர் தவறாக விளங்கிக் கொண்டுள்ளனர் என்பதை அவர்கள் தெரிவிக்கும் கருத்துக்களில் இருந்து தெளிவாகிறது.

குறிப்பாக, வெளிநாடுகளில் தொழிலுக்கு சென்றிருக்கும் இலங்கையர்கள் மீண்டும் நாட்டுக்கு திரும்பும்போது, கடந்த காலங்களைப்போன்று டொபி, சொக்லட் போன்ற இனிப்பு வகைகள் மற்றும் தொலைக்காட்சி போன்ற இலத்திரனியல் பொருட்களை கொண்டுவர முடியாது என ஒரு சிலர் தெரிவித்து வருவதனை சமூக வலைத்தளங்கள் ஊடாகக் காண முடிகிறது.

வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் நாட்டுக்கு கொண்டுவரும் பொருட்களுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டிருக்கும் நிபந்தனைகள் அல்லாமல் புதிதாக வேறு எந்த வரையறையும் விதிக்கப்படவில்லை. மத்திய வங்கியினால் விதிக்கப்பட்டிருக்கும் நிபந்தனைக்கும் வெளிநாடுகளில் இருப்பவர்கள் நாட்டுக்குவரும்போது கொண்டுவரும் பொருட்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

அத்துடன் மத்திய வங்கியினால் 623 பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் நிபந்தனைகள் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மாத்திரமாகும். நாட்டுக்குள் இருக்கும் அந்நியச் செலாவணியை தடுத்துக் கொள்வதே இதன் நோக்கமாகும். அதனால் வெளிநாடுகளிலிருந்து வரும்போது தமது பாவனைக்காக கொண்டுவரும் இனிப்புப் பொருட்கள் மற்றும் இலத்திரனியல் பொருட்களுக்கு இந்தக் கட்டுப்பாடு உள்ளடக்கப்படவில்லை என்றார்.

Fri, 09/17/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை