ஐ.நா அமர்வில் ஜனாதிபதி விளக்கமாக எடுத்துரைப்பார்

சில நாடுகளின் தவறான கருத்துகள் குறித்தும் கவனம் - லலித் வீரதுங்க தெரிவிப்பு

நாட்டின் மனித உரிமை தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள முன்னேற்றகரமான நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டு அமர்வில் உரையாற்றவுள்ளதாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் லலித் வீரதுங்க தெரிவித்தார்.

அதேவேளை அது தொடர்பில் முன் வைக்கப்படும் தவறான கருத்துக்களை சரி செய்வது தொடர்பிலும் அவர் கவனம் செலுத்துவாரென்றும் அவர் தெரிவித்தார். கொரோனா வைரஸ் சூழ்நிலையால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவது, பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரம் மற்றும் சமூகரீதியான வீழ்ச்சியை சரி செய்வதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் அவரின் உரையின் போது கவனம் செலுத்தப்பட உள்ளது. மாநாட்டில் கலந்துகொள்ளும் அரச தலைவர்கள் ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகத்தை தனித்தனியே சந்திப்பதற்கு சந்தர்ப்பங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவருடன் முக்கிய பல விடயங்களை உள்ளடக்கிய பேச்சுவார்த்தையை முன்னெடுப்பார். அத்துடன் மாநாட்டில் கலந்து கொள்ளும் இலங்கைக்கு ஆதரவான பல்வேறு நாடுகளின் அரச தலைவர்களை சந்திக்கும் ஜனாதிபதி அந்த தலைவர்களுடன் முக்கியமான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பார் என்றும் ஜனாதிபதியின் ஆலோசகர் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையம் ஏற்பாடு செய்திருந்த வாராந்த செய்தியாளர் மாநாடு நேற்று சூம் தொழில்நுட்பம் ஊடாக நடைபெற்றதுடன் அந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துக்களை தெரிவிக்கும் போதே ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் லலித் வீரதுங்க இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;

இம்முறை ஐக்கிய நாடுகள் சபை அமர்வில் இரண்டு முக்கிய விடயங்கள் தொடர்பில் உரைகள் நடைபெறவுள்ளன. கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பை எதிர்நோக்கியுள்ள நாடுகள் அந்த பாதிப்பிலிருந்து தமது நாடுகளை மீளக் கட்டியெழுப்புவது எவ்வாறு என்பது தொடர்பில் இதன்போது முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

சில நாடுகள் மோசமான பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளன. அந்தவகையில் எமது நாடு தொடர்பில் நாம் சிறப்பாக விடயங்களை முன்வைக்க முடியும். முக்கியமாக தடுப்பூசிகளை வழங்கும் செயற்பாடுகளில் முதல் பத்து நாடுகளில் இலங்கை உள்ளடக்கப்பட்டுள்ளது. வளர்ச்சியடைந்து வரும் நாடு என்ற வகையில் இது நாம் பெற்றுக்கொண்டுள்ள பெரும் வெற்றியாகும் என்பதைக் குறிப்பிடலாம்.

நாட்டின் பொருளாதாரம், சமூக ரீதியில் அடைந்துள்ள வீழ்ச்சி ஆகியவற்றை மீளக் கட்டியெழுப்புவது எவ்வாறு என்பது தொடர்பில் ஜனாதிபதியால் விடயங்கள் முன்வைக்கப்படவுள்ளன. அதேவேளை, காலநிலை மாற்றம் தொடர்பில் பல்வேறு நாடுகளும் முகங்கொடுக்க நேர்ந்துள்ள நெருக்கடிகள் தொடர்பில் இங்கு ஆராயப்படவுள்ளன. அவற்றுக்கு முறையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாத காரணத்தினால் அவைபெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன என்பதால் அந்த விடயம் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளது. அத்துடன் மக்களின் வாழ்வாதாரத்துடன் சம்பந்தப்பட்ட அவர்களது உரிமைகள் மற்றும் எவ்வாறு அவற்றை சீர் செய்து கொள்வது என்பது தொடர்பில் பேசப்படவுள்ளன. எமது ஜனாதிபதிக்கு மிக முக்கியமான சந்தர்ப்பம் இதுவாகும். கடந்த காலங்களில் நாட்டில் மனித உரிமை சம்பந்தமான பல்வேறு முன்னேற்றகரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவை தொடர்பில் தெளிவுபடுத்தவும் முன் வைக்கப்படும் தவறான கருத்துக்களை சரி செய்வதற்கும் இந்த சந்தர்ப்பம் முக்கியமானதாகும்.

லோரன்ஸ் செல்வநாயகம்

 

Fri, 09/17/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை