இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சுயாதீன விசாரணை

வெலிக்கடை மற்றும் அநுராதபுரம் சிறைச்சாலைகளில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சுயாதீன விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. அதன் 3 பிராந்திய ஒருங்கிணைப்பு அதிகாரிகள் ஊடாக இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த 12 ஆம் திகதி, சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே உள்ளிட்ட குழுவினர் வெலிக்கடை மற்றும் அநுராதபுரம் சிறைச்சாலைகளுக்கு சென்று அங்குள்ள தமிழ் அரசியல் கைதிகளை அச்சுறுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டது.

இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் மற்றும் தமிழ்த்தேசிய கட்சிகளின் பிரதிநிதிகள் தங்களது எதிர்ப்பினை வெளியிட்டதையடுத்து லொஹான் ரத்வத்தே சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து விலகினார். இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவின் அதிகாரிகள் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு நேற்று நேரில் சென்று ஆராய்ந்திருந்தனர்.

அத்துடன் இந்த சம்பவம் தொடர்பில், சம்பந்தப்பட்ட அனைவருக்கும் விளக்கமளிக்க அழைப்பு விடுக்கப்படும் என இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை இந்த சம்பவத்துக்கு ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி ஹனா சிங்கர் ட்விட்டரில் கண்டனத்தைப் பதிவு செய்தார். அப்பதிவில் மண்டேலா உடன்படிக்கைக்கு அமைய சிறைக்கைதிகளுக்கு பாதுகாப்பளிப்பது அரசாங்கத்தின் கடமை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

Fri, 09/17/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை