காணாமல் போன பெண் இதுவரை கிடைக்கவில்லை

தொடரும் தேடுதல் பணிகள்

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிக்கிலியமான வனப்பகுதியில் காணாமல் போன பெண் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. நுவரெலியா பிலான்டேஷன் தோட்ட கீழ் பிரிவில் வசிக்கும் ஜெயபாலன் கவிபுகனலானி வயது(25) என்ற திருமணமாகாத பெண்ணே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.   கடந்த 5 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை விறகு சேகரிக்க தனது தாயுடன் சென்ற இவர்  காணாமல் போயுள்ளார். நேற்றுடன் நான்கு நாட்களாகியும் நேற்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இதனை தொடர்ந்து நேற்று 9 ஆம் திகதி வியாழக்கிழமை    விசேட பொலிஸ் படையினரும் இராணுவத்தினரும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளதாக நுவரெலியா பொலிசார் தெரிவித்தனர்.

காணாமல் போன தனது மகள் தன்னுடன்  கடந்த 5.9.2021 ஞாயிற்றுக்கிழமை காலை நுவரெலியா கிக்கிலியமான வனப்பகுதிக்கு விறகு சேகரிக்க வந்ததாகவும் அங்கு தனது மகள் காணாமல் போனதாகவும் பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையின் போது  தாய் தெரிவித்துள்ளார்.

தன்னோடு விறகு சேகரித்துக் கொண்டிருந்த மகள் அவ்விடத்திலிருந்து எவ்வாறு காணாமல் போனார் என்பது தெரியவில்லை. சில மணிநேரம் அவ்விடத்தில் கூக்குரல் இட்டு மகளை தேடியதாகவும் அவள் அங்கு இல்லை என்றும் தாய் பொலிசாரிடம் மேலும் தெரிவித்துள்ளார். 

காணாமல் போன பெண் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் என தெரியவந்துள்ளது. அவரைத் தேடுவதற்கு நேற்று (9) விசேட பொலிஸாரும் இராணுவத்தினரையும் ஈடுபடுத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

தலவாக்கலை குறூப் நிருபர்

 

 

Fri, 09/10/2021 - 10:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை