பாதுகாப்பு அமைச்சு, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு இணைந்து தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த பாரிய திட்டங்கள் முன்னெடுப்பு

பாதாள உலகை முடக்கவும் போதைப்பொருள் கடத்தலை முறியடிக்கவும் நடவடிக்கை

பாதுகாப்பு அமைச்சும், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சும் மேற்கொண்ட திட்டமிட்ட நடவடிக்கைகள் காரணமாக கடந்த ஒன்றரை வருட காலப்பகுதிக்குள் மாத்திரம் 3200 கிலோ ஹெரோயின் உட்பட பாரியளவிலான பல்வேறு விதமான போதைப் பொருள்களும், பெருமளவிலான ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரட்ன தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், திட்டமிட்ட குற்றச் செயல்கள், பாதாள உலக செயற்பாடுகள் மற்றும் போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கைகளை முறியடிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வழிகாட்டலின் கீழ் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு இணைந்து பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கொவிட் நிலைமை எவ்வாறு இருந்த போதிலும் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்றும் பாதுகாப்புச் செயலாளர் சுட்டிக்காட்டினார்.

2019ஆம் ஆண்டு முதல் இதுவரை இலங்கையின் கடல்சார் பாதுகாப்பு மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு உறுதிப்படுத்தும் பொருட்டு பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு முன்னெடுத்த செயற்பாடுகள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விஷேட செய்தியாளர் மாநாடு பத்தரமுல்லையிலுள்ள பாதுகாப்பு அமைச்சு கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன மற்றும் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரட்ண ஆகியோரின் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற இந்த செய்தியாளர் மாநாட்டில் பாதுகாப்புச் செயலாளர் மேலும் உரையாற்றுகையில் :-

ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு எனும் கொள்கை பிரகடனத்திற்கு அமைய இந்த அரசாங்கம் பொறுப்பேற்றதிலிருந்து தேசிய பாதுகாப்பிற்கு சகல சந்தர்ப்பங்களிலும் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது என்றார்.

ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான சகல நடவடிக்கைகளும் சட்டத்திற்கு அமைய முன்னெடுக்கப்படும் என்று தெரிவித்த அவர், இது தொடர்பில் ஏதாவது தகவல்கள் தெரிந்தவர்கள் இருப்பின் அவற்றை ஊடக மாநாடுகள் மூலம் விமர்சிப்பதை தவிர்த்து எவ்வித அச்சமுமின்றி குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வழங்குமாறு நாட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுப்பதாகவும் தெரிவித்தார்.

இச் சம்பவங்களுடன் தொடர்புபட்டவர்கள் சட்டத்திலிருந்து ஒருபோதும் தப்பிக்காதவாறு விரிவான விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக தெரிவித்த பாதுகாப்புச் செயலாளர், பொலிஸாரின் விசாரணைக்கு தேவையான முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றார்.

சிறைச்சாலைகளிலிருந்தே அதிகான குற்றச் செயல்கள் இடம்பெறுவதை கண்டறிந்து சிறைச்சாலையின் பாதுகாப்பு முறைமைகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டதன் பலனாக தற்பொழுது குற்றச் செயல்கள் முற்றாக குறைந்துள்ளது என்றார்.

இதேவேளை இரு அமைச்சுக்களும் முப்படையினர், பொலிஸார் மற்றும் புலனாய்வு தரப்பினர் ஒன்றிணைந்து செயற்பட்டதன் பலனாக குற்றச் செயல்கள் பாரிய அளவில் குறைவடைந்து காணப்படுகின்றது.

பூஸ சிறைச்சாலை முதற் தடவையாக அதிஉயர் பாதுகாப்பு சிறைச்சாலையாக மாற்றியமைக்கப்பட்டு பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய அனைவரும் இங்கு மாற்றப்பட்டு அவர்கள் வெளி உலகுடன் தொடர்பை மேற்கொள்ளும் தொலைத் தொடர்பு வசதிகள் முற்றாக முடக்கப்பட்டது. சிறைச்சாலைகளுக்கான விசேட பாதுகாப்பு முறைமை நீர்கொழும்பு, அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைகளுக்கும் அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன் வெகுவிரைவில் மஹர மற்றும் வெலிகட சிறைச்சாலைகளுக்கும் அமுல்படுத்தப்படும் என்றார்.

அத்துடன் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் இதுவரையான ஒருவருடம் ஒன்பது மாதம் காலப்பகுதிக்குள் 3200 கிலோ ஹெரோயின், 20 ஆயிரத்து 949 கிலோ கேரள கஞ்சா உட்பட பல்வேறு வகையான போதைப் பொருட்கள் தரை மற்றும் கடல் வழியாக கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன் பாதாள உலக கோஷ்டியினர் பயன்படுத்திய 48 பிஸ்டல்கள், 56 ரி- 56 ரக துப்பாக்கிகள் உட்பட பல்வேறு வகையான ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் பாதுகாப்புச் செயலாளர் மேலும் சுட்டிக்காட்டினார்.

ஸாதிக் ஷிஹான்

 
Fri, 09/10/2021 - 09:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை