கொவிட் கோர நிலைக்கு அரசியலே காரணம்!

JVP அனுரகுமார திஸாநாயக்க

கொவிட்-19 தொற்று நிலைமை பாரிய அழிவுக்கு சென்றதற்கு  அரசியலே காரணமாகும். தடுப்பூசி வழங்குவதிலும்   சில அமைச்சர்களுக்கு கோட்டா முறையில் தடுப்பூசி வழங்கப்பட்டதாக ஜே.பி.பி பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 61ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச்சேவை சட்டத்தின் கீழான கட்டளை, இலங்கைப் பிணையங்கள் மற்றும் பரிவர்தனை ஆணைக்குழு சட்டமூலம், உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழான கட்டளைகள், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி (கட்டுப்பாடு) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார். 

அவர் மேலும் கூறுகையில், 

இதற்கு முன்னர் இந்த பாராளுமன்றத்தில் உரையாற்றிய அரசாங்கத்தில் உள்ளவர்கள், எங்களிடம் வேண்டிய அளவுக்கு பணம் உள்ளது. நாட்டை சிறப்பாக கொண்டு செல்ல முடியும் என்றே கூறினர்.

ஆனால் நாட்டின் அரச வருமானத்தில் பிரச்சனை இருப்பதாகவும், வர்த்தக துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சனை மற்றும் டொலர் பற்றாக்குறை பிரச்சனை தொடர்பாக இந்த பாராளுமன்றத்தில் இப்போது நிதி அமைச்சர் கூறியுள்ளார்.

இந்த பொருளாதார நெருக்கடிக்கு அரசியலே காரணம். வேலைத்திட்டம் ஒன்றுக்காக செலவிடப்பட்ட தொகையிலும் பார்க்க குறைந்தளவான நிதியே அதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. மிகுதி பணங்கள் அரசியல்வாதிகளின் பைகளுக்கே சென்றுள்ளது. இந்த அரசியலில் மாற்றம் ஏற்படவில்லை.

அத்துடன் கொவிட் தொற்று நிலைமையும் பாரிய அழிவுக்கு சென்றமைக்கும் அரசியலே காரணமாகும். தடுப்பூசி வழங்குவதிலும் அரசியல் இருந்தது. சில அமைச்சர்களுக்கு கோட்டா முறையில் தடுப்பூசி வழங்கப்பட்டது. கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு மூவாயிரம் ஊசிகள் வழங்கப்பட்டன. அவை ஜயவர்தனபுர வைத்தியசாலையிலேயே வைக்கப்பட்டிருந்தன. அதில் நூறு பந்துல குணவர்தனவுக்கு வழங்கப்பட்டது.

இதனை நான் வெளியிலும் கூறியுள்ளேன்.

பாராளுமன்ற சிறப்புரிமைக்கு அமைய மேற்கொள்ளும் கருத்து அல்ல. ஊடக சந்திப்பிலும் கூறியுள்ளேன். வேண்டுமென்றால் வழக்குப் போடுங்கள். அதற்கு முகம்கொடுக்க நான் தயாராகவே இருக்கின்றேன். இந்த அரசியலை மாற்றாது இந்த பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியுமென்று நினைக்க வேண்டாம்.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

 
Wed, 09/08/2021 - 09:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை