ஆப்கான் தலைநகரில் ஆர்ப்பாட்டக்காரரை கலைக்க தலிபான்கள் வானை நோக்கி சூடு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் நேற்று இடம்பெற்ற மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை கலைக்க தலிபான்கள் வானை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

கடும் துப்பாக்கிச் சத்தங்கள் பின்னணியில் கேட்க மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடும் காட்சி சம்பவ இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றில் தெரிகிறது.

தலிபான்களின் ஆட்சியை எதிர்த்தும் பெண் உரிமையைக் கேட்டும் ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் நேற்று வீதிகளில் திரண்டனர். அண்டை நாடான பாகிஸ்தான் தலிபான்களுக்கு ஆதரவு அளிப்பதாக பலரும் நம்புகின்ற நிலையில் பாகிஸ்தான் எதிர்ப்பு கோசங்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்டன.

“பாகிஸ்தானே... ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறு” என்றும் அவர்களில் பலர் கோஷமிட்டனர். “அல்லாஹு அக்பர்” என்றும் சிலர் முழக்கமிட்டனர்.

வேறு சிலர், “எங்களுக்கு சுதந்திரமான தேசம் வேண்டும், பாகிஸ்தானின் கைப்பாவை அரசு தேவையில்லை. பாகிஸ்தானே வெளியேறு,” என்றும் கோஷமிட்டனர்.

முன்னதாக, கடந்த திங்கட்கிழமை நள்ளிரவுக்குப் பின் சமூக ஊடகங்களில் பல்வேறு வீடியோக்கள் பகிரப்பட்டன. அதில் பெருமாபாலானவை, காபூலில் ஏராளமான ஆப்கானியர்கள் திரண்டு பாகிஸ்தானுக்கு எதிராக கோஷமிடும் வீடியோக்களாக இருந்தன. அந்த வீடியோவில் இருந்தவர்கள், தலிபான் எதிர்ப்பு கோஷத்தை முழங்கினர்.

எனினும் தலிபான்களுக்கு ஆதரவளிப்பதான குற்றச்சாட்டை பாகிஸ்தான் மறுத்து வருகிறது.

தலிபான் போராளிகள் தமது துப்பாக்கியை வானை நோக்கி சுடும் காட்சியைக் கொண்ட வீடியோ ஒன்றும் தற்போது வெளியாகியுள்ளது. எனினும் இவ்வாறு வானை நோக்கி சுட்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட சம்பவத்தில் கடந்த வாரம் பலர் கொல்லப்பட்ட நிலையில் இந்த செயலுக்கு தலிபான் அமைப்பு தடை விதித்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும் இந்த பேரணிகளை வீடியோ எடுப்பதில் இருந்து ஊடகவியலாளர்கள் தடுக்கப்பட்டுள்ளனர். சில வெளிநாட்டு செய்தி நிறுவனங்களை சேர்ந்தவர்கள் உட்பட தமது ஊடகவியலாளரும் கைது செய்யப்பட்டதாக ஆப்கானிஸ்தானின் டோலோ செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த வாரத்தில் பெண்கள் மாத்திரமே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அவர்களின் சம உரிமை மற்றும் பாதுகாப்பு கோரிக்கைக்கான ஆர்ப்பாட்டத்தில் நேற்று ஆண்களும் ஈடுபட்டிருந்தனர்.

தலிபான் எதிர்ப்பாளர்கள் பெரும்பாலும் உள்ள பஞ்ஷிர் பகுதியை தலிபான் தங்கள் வசமாக்கிக் கொண்டதாகக் கூறி அங்கு தங்களுடைய கொடியை பறக்க விட்ட நாளில் தலிபான்களுக்கு எதிராக தலைநகர் காபுலில் மக்களின் போராட்டம் நடந்துள்ளதால் அது பரவலான கவனத்தை ஈர்த்துள்ளது.

முன்னதாக தலிபான் எதிர்ப்புப் போராட்டத் தலைவரான அஹமது மசூத், தலிபான்களுக்கு எதிராக பொதுமக்களின் தேசிய எழுச்சிப் போராட்டம் ஒன்றுக்கு கடந்த திங்கட்கிழமை அழைப்பு விடுத்தார்.

Wed, 09/08/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை