ஆப்கான் விவகாரத்தில் கூட்டாக செயல்பட இந்தியாவும் ரஷ்யாவும் இணக்கம்

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்காவும் நேட்டோவும் வெளியேறிய நிலையில் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள புதிய சூழல்களை கையாள்வது தொடர்பாக பிராந்தியத்தின் நீண்டகால நண்பர்களான இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்துள்ளன. இது தொடர்பாக பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவென இந்திய பிரதி பாதுகாப்பு ஆலோசகர் பங்கஜ் சரன் இவ்வாரம் மொஸ்கோ சென்றிருந்தார்.

அங்கே ரஷ்ய பாதுகாப்பு ஆலோசகர் நிக்கொலே பெட்ருஷேவ் மற்றும் பிரதி வெளிநாட்டமைச்சர் இகோர் மோர்குலோவ் ஆகியோரை சந்தித்து அவர் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள புதிய சூழல்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.

அமெரிக்கா வெளியேறிய நிலையில் அங்கு ஏற்பட்டுள்ள சூழலில் இரு நாடுகளும் ஒருமித்து செயல்படுவதற்கான சாத்தியங்கள் பிரகாசமாக உள்ளதாக இந்திய இராஜதந்திர வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. இப்பேச்சுவார்த்தைகளில் ரஷ்யாவுக்கான இந்தியத் தூதர் வென்டகேஷ் வர்மா மற்றும் இந்திய தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலக அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

ஆப்கானிஸ்தான் தொடர்பான அரசியல் மற்றும் இராஜதந்திர முயற்சிகளை நாங்கள் தொடர்ந்து மேற்கொள்வதோடு எமது பிராந்திய பங்காளி நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு தற்போது காணப்படும் பிரச்சினைகளுக்கு சமாதான தீர்வை பெற்றுத்தர முனைவோம் என ரஷ்ய தினசரியான இஸ்வெஸ்தியாவுக்கு தெரிவித்த தகவலில் ரஷ்ய பாதுகாப்பு ஆலோசகர் பெட்ருஷேவ் குறிப்பிட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தானை அண்டிய நாடுகளான தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் ஈரான், சீனா, இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுடனும் ரஷ்யா நெருங்கிய தொடர்பில் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Sat, 08/28/2021 - 12:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை