துருக்கி தேசிய பாதுகாப்பு அமைச்சருடன் இலங்கை பாதுகாப்புச் செயலாளர் சந்திப்பு

துருக்கிக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்ன, துருக்கி குடியரசின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் ஹுலூசி அகாரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

பாதுகாப்பு செயலாளருக்கும் துருக்கி தேசிய பாதுகாப்பு அமைச்சருக்கும் இடையிலானஇந்த சந்திப்பு இஸ்தான்புல் நகரில் இடம்பெற்றது.

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடைபெற்ற 15 வது சர்வதேச பாதுகாப்பு தொழில்முறைக் கண்காட்சி - 2021 என்ற நிகழ்ச்சி நிரலின் ஓர் அங்கமாகவே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இருநாட்டு பாதுகாப்பு உயர் அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற இந்த கலந்துரையாடல் இரு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு உறவுகளை மேலும் பலப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.

துருக்கி ஜனாதிபதியின் அனுசரணையுடன் அந்நாட்டு தேசிய பாதுகாப்பு அமைச்சினால் நடத்தப்பட்ட சர்வதேச பாதுகாப்பு தொழில்முறைக் கண்காட்சி - 2021 நிகழ்வானது ஓகஸ்ட் 17 முதல் 20 வரை இடம் பெற்றது.

இந்த கண்காட்சி, துருக்கிய ஆயுதப்படைகள் குழுமத்தின் ஏற்பாட்டுடனும் முகாமைத்துவத்துடனும் தூயாப் (TUYAP) வர்த்தக மற்றும் ஒன்றுகூடல் மாநாட்டு மத்திய நிலையத்தில் இடம்பெற்றது.

இக்கண்காட்சியில் ஆயுதங்கள், தரைப்படை வாகனங்கள், இராணுவ இலத்திரனியல் சாதனங்கள், கடற்படை ஆயுத தளவாடங்கள், விமான முறை, தளவாட வாகனங்கள், விநியோக உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு சாதனங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு துறைசார் தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன.

நான்கு நாட்கள் இடம்பெற்ற இந்த அமர்வுகளில் விண்வெளி ஆய்வுகள், எதிர்கால தொழில்நுட்பங்கள் மற்றும் டிஜிட்டல் மாற்றம் போன்ற பல்வேறு தலைப்புகளில் குழுநிலை கலந்துறையாடல்கள் இடம்பெற்றன.

பாதுகாப்புச் செயலாளர் மற்றும் துருக்கி தேசிய பாதுகாப்பு அமைச்சர் ஆகியோருக்கு இடையிலான இந்த கலந்துரையாடலில் துருக்கிக்கான இலங்கை தூதுவர் எம். ஆர். ஹஸன், இலங்கை பாதுகப்பு அமைச்சின் இராணுவ இணைப்பதிகாரி பிரிகேடியர் தினேஷ் நாணயக்கார மற்றும் பாதுகாப்புச் செயலாளரின் இராணுவ உதவியாளர் கேர்ணல் விஜேனாத் ஜெயவீர ஆகியோரும் கலந்துகொண்டனர்.

ஸாதிக் ஷிஹான்

 
Thu, 08/26/2021 - 10:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை