கூடுதல் தடுப்பூசி வழங்குவதை நிறுத்த செல்வந்த நாடுகளுக்கு கடும் அழுத்தம்

பதிலாக வறிய நாடுகளுக்கு வழங்க சுகாதார அமைப்பு கோரிக்கை

கொவிட்-19 தடுப்பூசிகளை முழுமையாகப் போட்டுக்கொண்டவர்களுக்குக் கூடுதல் தடுப்பூசி போடுவதை ஒத்திவைக்குமாறு, பணக்கார நாடுகளை உலக சுகாதார அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

மாறாக, கூடுதல் தடுப்பு மருந்தை ஏழை நாடுகளுக்கு நன்கொடையாக வழங்குமாறு அது கேட்டுக்கொண்டது.

உலக அளவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 200 மில்லியனைத் தாண்டியதைத் தொடர்ந்து, உலக சுகாதார அமைப்பு அந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளது.

4 மில்லியனுக்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றுக்குப் பலியாகிவிட்டனர்.

இருப்பினும், உலக சுகாதார அமைப்பின் வேண்டுகோளை அமெரிக்கா நிராகரித்துள்ளது.

தனது மக்களுக்குக் கூடுதல் தடுப்பூசி போடுவதற்கும் ஏழை நாடுகளுக்கு அவற்றை நன்கொடையாக வழங்குவதற்கும் தனக்குப் போதுமான தடுப்பு மருந்து இருப்பதாக அது குறிப்பிட்டது.

மற்ற எந்த நாட்டைக் காட்டிலும் அமெரிக்கா அதிக அளவில் தடுப்பு மருந்தை நன்கொடையாக வழங்கியிருப்பதாய் வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் ஜென் சாக்கி கூறினார். மற்ற நாடுகளையும் தடுப்பு மருந்தை நன்கொடையாக வழங்க முன்வருமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

இஸ்ரேல் மற்றும் ஜெர்மனி உட்பட பல நாடுகளும் தமது நாட்டு மக்களுக்கு மூன்றாவது முறையாகவும் தடுப்பு மருந்து வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளன. எனினும் தடுப்பு மருந்து வழங்குவதில் ஏழை நாடுகள் பெரும் பின்னடைவை சந்திப்பதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டொக்டர் டெட்ரோஸ் கெப்ரியேசுஸ் தெரிவித்துள்ளார். போதிய அளவில் தடுப்பு மருந்து விநியோகம் இல்லாததால் குறைந்த வருமானமுடைய நாடுகளில் ஒவ்வொரு 100 பேரில் 1.5 டோஸ்கள் தடுப்பு மருந்தே வழங்கப்பட்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. “டெல்டா வைரஸ் திரிபில் இருந்து தமது பிரஜைகளை பாதுகாப்பதில் அனைத்து அரசுகளும் கவனம் செலுத்துவதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், உலகளாவிய தடுப்பு மருந்தின் பெரும்பகுதியை ஏற்கனவே பயன்படுத்திய நாடுகள் அதனை விடவும் பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று டெட்ரோஸ் குறிப்பிட்டார். உயர் வருமானம் உடைய நாடுகள் மற்றும் குறைந்த வருமானம் உடைய நாடுகளுக்கு இடையிலான இடைவெளியை குறைக்க தமது அமைப்பு முயன்று வருவதாக உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டது.

அடுத்த மாதத்தில் ஒவ்வொரு நாட்டிலும் மக்கள் தொகையில் 10 வீதத்தினர் தடுப்பு மருந்தை பெற்றிருப்பதை இலக்கு வைத்தபோதும், தற்போதைய சூழலில் அந்த இலக்கை எட்டுவது கடினமாக உள்ளது என்று கூறப்படுகிறது.

ஹைட்டி மற்றும் கொங்கோ ஜனநாயகக் குடியரசில் ஒருவருக்கேனும் இரு தடவைகள் தடுப்பூசி வழங்கப்படவில்லை.

டெல்டா திரிபினால் அண்மைய மாதங்களில் இந்தோனேசியாவில் நோய்த்தொற்று மற்றும் உயிரிழப்பு அதிகரித்து காணப்படுகிறது. எனினும் அந்நாட்டில் 7.9 வீத மக்கள் தொகையே முழுமையாக தடுப்பு மருந்தை பெற்றுள்ளது.

மறுபுறம் இஸ்ரேல் தமது மக்கள் தொகையில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் வகையில் மூன்றாவது முறையாக தடுப்பு மருந்து வழங்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. ஜெர்மனியும் இவ்வாறான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. பிரிட்டனில் வரும் செப்டெம்பரில் பாதிப்புக்குள்ளாகும் அச்சுறுத்தல் உள்ளவர்களுக்கு மூன்றாவது முறை தடுப்பூசி வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்கா மூன்றாவது தடுப்பு மருந்தை வழங்கும் திட்டம் ஒன்றை அறிவிக்காதபோதும் தம்மிடம் போதுமான தடுப்பு மருந்து இருப்பதாக வெள்ளை மாளிகை குறிப்பிட்டுள்ளது. வறிய நாடுகளுக்கு தடுப்பு மருந்தை வழங்கும்படி உலக சுகாதாரா அமைப்பு செல்வந்த நாடுகளிடம் கேட்டுக்கொள்வது இது முதல்முறையல்ல.

கடந்த மே மாத்தில் செல்வந்த நாடுகள் தமது சிறுவர்கள் மற்றும் பதின்ம வயதினருக்கு தடுப்பு மருந்தை வழங்கப்போவதாக அறிவித்தபோதும் உலக சுகாதார அமைப்பு இந்த வேண்டுகோளை விடுத்திருந்தது.

Fri, 08/06/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை