பன்ஜ்ஷிர் பள்ளத்தாக்கிற்கு தலிபான்கள் படையெடுப்பு

ஆப்கானில் தலிபான்கள் கட்டுப்பாட்டில் இல்லாத சில பகுதிகளில் ஒன்றான பன்ஜ்ஷிர் பள்ளத்தாக்கை நோக்கி நூற்றுக்கணக்கான போராளிகள் அனுப்பப்பட்டிருப்பதாக தலிபான்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தலிபான்கள் ஆப்கானை கைப்பற்றியதை அடுத்து வடக்கு காபூலில் உள்ள பன்ஜ்ஷிரில் முன்னாள் அரச படை துருப்புகள் ஒன்று திரண்டிருப்பதோடு அவர்கள் தலிபான் எதிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

‘மாநிலத்தின் உள்ளூர் அதிகாரிகள் அமைதியான முறையில் அதிகாரத்தை கையளிக்க தவறியுள்ள நிலையில், பன்ஜ்ஷிர் மாநிலத்தை கட்டுப்பாட்டில் கொண்டுவர அதனை நோக்கி இஸ்லாமிய எமிரேட்டின் நூற்றுக்கணக்கான முஜாஹிதீன்கள் முன்னேற ஆரம்பித்துள்ளனர்’ என்று தலிபான்கள் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

தலிபான்களுடன் அமைதியான முறையில் பேசுவதற்கு எதிர்பார்ப்பதாகவும் ஆனால் தமது படையினர் போராட்டத்திற்கு தயாராக இருப்பதாகவும் தலிபான் எதிர்ப்புப் படையைக் கொண்டிருக்கும் அஹமது மசூத் கடந்த ஞாயிற்றுக்கிழமை குறிப்பிட்டிருந்தார்.

தலிபான் எதிர்ப்பு கோட்டையாக மாறி இருக்கும் பன்ஜ்ஷிர் பள்ளத்தாக்கில் இருந்து ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தொலைபேசியில் பேசிய மசூத், ‘பேச்சுவார்த்தை மூலமே முன்னோக்கிச் செல்ல முடியும் என்பதை தலிபான்களுக்கு புரியவைக்க நாம் விரும்புகிறோம்’ என்று குறிப்பிட்டார்.

பன்ஜ்ஷிர் பள்ளத்தாக்கில் இராணுவ வீரர்கள், சிறப்புப் படையினருடன் உள்ளூர் தலிபான் எதிர்ப்புப் போராளிகளும் நிலைகொண்டுள்ளனர்.

அஹமது மசூத் 1980களின் சோவியத் எதிர்ப்பு போராட்டத் தலைவர்களில் ஒருவரான அஹமது ஷாஹ் மசூத்தின் மகனாவார். இந்தப் பள்ளத்தாக்கை ஆக்கிரமிக்க முயலும் தலிபான்களுக்கு எதிராக போராட தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தலிபான்கள் பன்ஜ்ஷிர் பள்ளத்தாக்கில் படை நடவடிக்கையை ஆரம்பித்ததாக கூறியபோதும் அந்தப் பளத்தாக்கிற்கான குறுகலான வீதி வழியாக எந்த படையும் நுழைவதற்கான அறிகுறிகள் இன்னும் இல்லை என்று மசூத் குறிப்பிட்டுள்ளார்.

தலிபான் எதிர்ப்புப் படையினர் கடந்த வாரம் பன்ஜ்ஷிர் பள்ளத்தாக்கின் எல்லையில் அமைந்துள்ள பக்லான் மாகாணத்தின் மூன்று மாவட்டங்களை கைப்பற்றியுள்ளனர். கடந்த ஓகஸ்ட் 15 ஆம் திகதி தலிபான்கள் காபூல் நகரை கைப்பற்றிய பின்னர் இடம்பெற்ற மோதல்களாக இவை உள்ளன.

Tue, 08/24/2021 - 14:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை