மலையக வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு

வெறிச்சோடியது நகரங்கள்

மலையகத்தில் கொவிட் 19 தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் பொருட்டு கடந்த சில நாட்களாகவே நகரங்கள் பல முடக்கப்பட்டுவருகின்றன. குறிப்பாக வர்த்தக சங்கங்கள் தாமாகவே முன்வந்து ஒரு வாரகாலத்துக்கு வர்த்தக நிலையங்களை மூடி மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுத்துள்ளன. இரத்தினபுரி, பதுளை, பண்டாரவளை, கேகாலை முதலான நகரங்களை இரண்டு வார காலத்துக்கு மூடுவதற்கு அங்குள்ள வர்த்தக சங்கங்கள் தாமாகவே முடிவெடுத்துள்ளன.

பதுளை நகரத்திலுள்ள வர்த்தக நிலையங்களை நேற்று முதல் தொடர்ந்து ஒரு வாரகாலத்துக்கு மூடுவதற்கு நகர வர்த்தக சங்கத்தினர் தீர்மானித்துள்ளனர். பதுளை மாவட்டத்தில் அதிகரித்துள்ள கொவிட் 19 தொற்று நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காகவே நகர வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

எனினும், ஒரு சில வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதோடு, ஏனைய அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.

இதேவேளை பண்டாரவளை நகர வர்த்தக நிலையங்கள் கொவிட் 19 தொற்று நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு கடந்த 16 ஆம் திகதி தொடக்கம் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை மூடப்பட்டுள்ளதாக நகர வர்த்தக சங்கத்தினர் தீர்மானம் மேற்கொண்டுள்ளனர்.

கொட்டக்கலை நகரிலுள்ள அனைத்து கடைகளும் கொவிட் தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் பொருட்டு இன்று தொடக்கம் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை ஒரு வாரகாலத்துக்கு வர்த்தக நிலையங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக கொட்டகலை ஐக்கிய வர்த்தகர் சங்கத் தலைவர் புஷ்பா விஸ்வநாதன் தெரிவித்தார்.

கொட்டகலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டமையால் நகரத்தை முடக்குவதற்கு கொட்டகலை ஐக்கிய வர்த்தகர் சங்க அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்களால் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். கொட்டகலை பிரதேச சபையின் உதவியுடன், நகரம் மூடப்பட்ட காலத்தில் நகரத்தின் அனைத்து இடங்களையும் கிருமி நீக்கம் செய்து சுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் நடமாட்டம் அதிகமான பகுதிகளுக்கான தொற்று நீக்கும் வேலைத்திட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழிப்புணர்வு நடவடிக்கைகளும் கொட்டகலை பிரதேச சபையினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். கேகாலை மாவட்டத்தின் அபாய நிலையை கருத்திற் கொண்டு தெரணியகலை நகரத்தில் நேற்று தொடக்கம் எதிர்வரும் 26ஆம் திகதி வியாபார நிலையங்களை மூடுவதற்கு வர்த்தக சங்கம் முடிவெடுத்துள்ளது. அதேப்போல் ருவன்வெல்ல நகரத்திலும் இன்று தாெடக்கம் எதிர்வரும் 26ஆம் திகதி வரை கடைகளை மூடுவதற்கு வர்த்தக சங்கம் தீர்மானித்துள்ளது.

இதே​ேவளை நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட நகரங்களின் வர்த்தக நிலையங்களை இரண்டு வாரங்களுக்கு மூடுவதற்கு நகர வர்த்தகர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்ைககள் முன்வைக்கப்பட்டு வருகின்றது.

பதுளை தினகரன் விசேட, ஹற்றன் சுழற்சி, தலவாக்கலை குறூப் நிருபர், கினிகத்தேனை தினகரன், அவிசாவளை, காவத்தை நிருபர்கள்,

 

Thu, 08/19/2021 - 12:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை