தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீடிக்கப்படுமா?; இன்று ஜனாதிபதி செயலணி அமர்வின் பின்னர் தீர்மானம்

சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு

தற்போது நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தலுக்கான ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் 30 ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் நிறைவு பெறும் நிலையில் அதனை நீடிப்பதா இல்லையா என்ற தீர்மானம் இன்று மாலை வெளியிடப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்து ள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை விசேட ஜனாதிபதி செயலணி அமர்வின்போது நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் மரணமடைந்தோரின் தொகை ஆகியவற்றை கவனத்திற் கொண்டே தனிமைப்படுத்தலுக்கான ஊரடங்குச் சட்டத்தை தொடர்வதா இல்லையா என்பது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மக்கள் சுகாதார வழிமுறைகளை முறையாகப் பின்பற்றுவது நூற்றுக்கு நூறு வீதம் முறையாக இடம்பெறவில்லை என்பதைசுட்டிக்காட்டியுள்ள அவர் ஊரடங்குச் சட்டமானது புதிதாக நோயாளர்கள் உருவாவதைத் தடுக்கவும் வைரஸ் பரவலை தடுக்கவுமே என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மக்கள் ஒன்று கூடுவதை தவிர்ப்பதன் மூலமே வைரஸ் பரவலை தடுக்க முடியும்.

அதனைக் கவனத்திற் கொண்டு மக்கள் வீட்டிலிருந்து வெளியில் செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறும் தெரிவித்துள்ள அவர் அவ்வாறு செயற்படாவிட்டால் நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை தற்போதைய சூழ்நிலையில் மக்கள் சுகாதார வழிமுறைகளை முறையாக பின்பற்றி பொறுப்புடன் செயற்பட தவறுவார்களானால் தனிமைப்படுத்தலுக்கான ஊரடங்கு சட்டத்தை மேலும் நீடிக்க நேரிடும் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அது தொடர்பில் மேற்படி சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டாக்டர் சமந்த ஆனந்த நேற்று தெரிவிக்கையில்;

நாட்டில் தனிமைப்படுத்தலுக்கான ஊரடங்குச் சட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளநிலையில் சுகாதார வழிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டிய மக்களும் ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்துபவர்களும் முறையாக செயற்படுவது அவசியமாகும்.

தனிமைப்படுத்தலுக்கான ஊரடங்குச் சட்டத்தை முறையாக செயல்படுத்துவதற்கு நாட்டு மக்களின் முழுமையான ஒத்துழைப்பு அவசியமாகும். அவ்வாறின்றேல் ஊரடங்கு சட்டத்தை மேலும் தொடர வேண்டிய நிலை ஏற்படும்.

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாட்டை மூடுவது திறப்பது என்ற நிலையில் தொடர்ந்தும் பயணிக்க முடியாது.

அது நாட்டு மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் பெரும் அசௌகரியமாக அமையும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

 
Fri, 08/27/2021 - 12:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை