டெல்டாவிலிருந்து தப்பித்துக்கொள்ள இரு டோஸ்களையும் பெறுதல் அவசியம்

டாக்டர் சந்திம ஜீவந்தர மக்களுக்கு வேண்டுகோள்

 

நாட்டில் மிக வேகமாகப் பரவிவரும் டெல்டா திரிபு வைரஸ் தொற்றிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வதற்கு மக்கள் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக் கொள்வது மிகவும் அவசியம் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட ஆய்வுத் துறைக்கான தலைவர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி தொடர்பில் பல்வேறு தரப்பினரும்  தெரிவித்துவரும் சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் வகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அஸ்ட்ரா செனேகா மற்றும் கொவிஸீல்ட் என பெயரிட்டு அழைக்கப்படும் இரண்டு தடுப்பூசிகளும் ஒன்றே என்பதை குறிப்பிட்டுள்ள அவர் மக்கள் எதுவித சந்தேகமும் பயமும் இன்றி அந்த தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

அஸ்ட்ரா செனேகா தடுப்பூசியை முதலாவது தடுப்பூசியாக பெற்றுக்கொண்டு இரண்டு மாதங்களல்ல, ஐந்து மாதங்கள் கடந்தாலும் இரண்டாவது தடுப்பூசியை கண்டிப்பாக பெற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ள அவர், அஸ்ட்ரா செனேகா முதலாவது தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளிட்ட உடல் பலம் அதிகரித்துக் காணப்படுவதாக பரிசோதனைகள் மூலம் தெரிவிக்கப்படுவதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதனைக் கருத்திற் கொண்டு தாமதமானாலும் இரண்டாவது தடுப்பூசியை கண்டிப்பாக பெற்றுக்கொள்ள வேண்டுமென அவர் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்டதும் முழுமையான நோய் எதிர்ப்பு சக்தியை உள்வாங்கிக்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அஸ்ட்ரா செனேகா தடுப்பூசி தொடர்பில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் பல்வேறு சந்தேகங்களை உள்ளடக்கிய தொலைபேசி அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளதாக குறிப்பிடும் அவர், அனைவருக்கும் மேற்படி ஆலோசனையையே தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் நடைமுறையில் மக்களுக்கு பெற்றுக் கொடுக்கும் அனைத்து கொரோனா வைரஸ் தடுப்பூசிகளும் கலாநிதி சந்திம ஜீவந்தர தலைமையிலான ஆய்வு குழுவினரின் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.(ஸ)

 

லோரன்ஸ் செல்வநாயகம்

Tue, 08/03/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை